Pages

Wednesday, November 8, 2017

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா.
பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன்.
கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது.

சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன்.

இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? என மிரட்டி என்னை தூங்க வைப்பாள், காலையில் எழுந்து பார்த்தால் முகட்டு ஓட்டின் மேலே நின்று கொண்டு, ஸ்கூலில் பீ.டி மாஸ்டர் சொல்லிக் கொடுக்கும் டிரில் எல்லாம் பண்ணிக் கொண்டிருக்கும். இதைப் பார்த்ததும் எனக்கு அதைப் போலவே ஆக வேண்டும் என்று தோன்றியது. பொடக்காளியில் இருக்கிற வேப்பமரம், வீட்டுக்கு முன்னாடி இருக்கிற குட்டிச்சுவர் என அது ஏறாத இடமே இல்லை. எனக்கு அதெல்லாம் ஒரு வித்தையாய் இருந்தது.

நான் ஆசார தின்னையில் உட்க்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் போதே அம்மா புகையிலைக் குடோனிலிருந்து வந்திருந்தாள்.

ஏதோ எடுப்பதற்க்காக வெளியே வந்த ஆத்தா அம்மாவைப் பார்த்து, யேலே ஈஸ்வரி அந்த கெரகம் பக்கத்து வீட்டுல கோழிக்கு வச்சிருந்த விசத்த திண்ணு போடுச்சுலே என்று சொல்லி அழ ஆரம்பித்துவிட்டாள்.

பின்னாடியே வந்த பெரியம்மா ஆத்தா அழுவதைப் பார்த்து, தேமா அழற எனக் கேட்டுக் கொண்டே ஆசாரத்துக்குள் அம்மாவும் அவளும் வந்தார்கள்.
அந்த கிரகம் நாசுவமூட்டுல வச்சிறுந்த விசத்த திண்ணுபோட்டு சாவக்கிடக்குதுலே…. என ஒப்பாரி வைத்தாள். அம்மா அவளின் தோள்பட்டையை கவனமாக பிடித்துக்கொண்டாள். ஆத்தாவுக்கு வெடுவெடுவென வருதுனு சொல்லியாதல் அம்மா அப்படி பிடித்தாள்.

டீ போட்டு யாரும் குடிக்கவே இல்லை. நான் மட்டும் குடித்து டம்ளரை வைக்கும் போதுதான் பார்த்தேன். ஆத்தா சாமான் வைக்க போட்டிருந்த பலகையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மா பெரிய தெருவையே பார்த்திருந்தாள். எனக்கு என்ன செய்வதேன்று தெரியவில்லை.
அட தே இப்படி எல்லா வெசனப்பட்டு உக்காந்துட்டீங்க என்றாள் கலை. அம்மா விசயத்தைச் சொன்னதும், அவள் பெரிதாக கவலைப்படவில்லை. இருந்தாலும் நிலைமையை காரணம் காட்டி வருத்தத்தை வழுக்கட்டாயமாக வர வைத்தாள். பூனை நாங்க பாலயோ, சோறயோ வைக்காம அது திங்காது. வீட்டுல பால் பாத்திரத்தையோ, தயிர் பாத்திரத்தையோ உருட்டாது. என்ன பசினாலும் எங்க அம்மா சோறு வைச்சாதா திங்கும், இல்லைனா காலைச் சுத்துக்கிட்டே கத்திக்கிட்டு கிடக்கும் என பூனையைப் பற்றி சோகமாய் பெருமையடித்தாள் அம்மா. துக்கம் விசாரித்துவிட்டு நகர்ந்தாள் கலை.

இருள் மெல்ல பாம்பைப் போல ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. இதோ அப்பா வந்திருவாறு என நானும் எல்லோரும் நினைத்திருந்தோம். அவரு ஒன்னும் மருத்துவமோ இல்ல அத காப்பாத்தனும்னோ துளியும் கவலைப்படமாண்டார். சொல்லப்போன அந்த கருமத்த அடிச்சு கொல்லனும்னுதா சொல்லுவாறு. எங்க அப்பா ஆத்த மேல வச்சிருந்த கோவத்தையேல்லாம் பூனை மேலதா காட்டுவாறு.

பூனைய கருமம், கருமம்னுதா கூப்பிடுவாறு. ஒருநாள் ஆத்தா நேராவே கேட்டுப் போட்டா, ஏ அத திட்டுற மாதிரி சாட மாடயா என்னைய திட்டறீங்க, நேராவே திட்டறதுனா திட்டிறதுதான. நினைவு தெரிந்து ஆத்தா அப்பாவிடம் பேசும் சில வார்த்தைகளில் இதும் சிலது. அன்றோடு அப்பா பூனையிடம் பேசுவதில்லை.

இரணி நேர ஆகிப் போச்சு, இன்னேரத்துக்கு கால கால சுத்திக்கிட்டு வந்து கத்தும். எங்க போச்சுன்னு தெரியலையே? இருந்தாலும் தொல்லை இல்லைனாலும் கஸ்டமா இருக்குது. பச்…..என சொல்லிக்கொண்டு எழுந்து வீட்டுக்குள் போய்விட்டாள். அம்மா டம்ளரிலிருந்த டீயை அப்படியே பாத்திரத்தில் ஊற்றி சமையல் வீட்டுக்குள் எழுந்து போனாள். நான் தின்னையிலேயே இருந்தேன்.
பூனை கத்துற சத்தம் ரொம்ப பழகிப்போயிருந்தது. ஆத்தா சொன்னத கேட்டதும் அது எப்படி பசியாயிருந்தா கத்தும் என நினைத்துக்கொண்டேன். அடிவயிற்றிலிருந்து வார்த்தையை அழுத்தி உச்ச ஸ்தாயில் மியாவ்…….மியாவ்….. என கத்தும். நான் அதைப் போலவே கத்தியதும், ஆத்தா கட்டலிலிருந்து எழுந்து வரும் சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்து பூனையை காணாமல் போனதும் என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே போனாள்.

அதற்க்குள் விசயம் ஊர் முழுக்க பரவியிருந்தது. துக்கம் விசாரிக்க வேண்டுமென யாரும் வரவில்லை ஆனால் போற வழியில பார்த்தா கேக்க ஆரம்பிச்சிடுவாங்க. அம்மாவும், ஆத்தாவும் வீட்டுக்குள் இருந்ததால் பெரியம்மா எங்கோ போய்விட்டு வந்தவளிடம் கேட்க ஆரம்பித்தார்கள். அவளுக்கு பூனை ஒரு பேடி என்றுதான் நினைப்பு. முன்னாலேல்லாம் யாராவது கேட்டால் அது வேலுச்சாமி ஊட்டு பூனை வந்துச்சுன்னா அப்படியே பயத்துல ஒன்னுக்கு போயிடும். அது வந்து வீட்டுல இருக்கிற பாத்திரத்தை உருட்டிட்டு போகும் இது அப்படியே வேடிக்கை பாக்கும் என்பாள். இன்று அப்படி சொல்ல முடியவில்லை. துக்கம் கொண்டிருந்த வீடு என்பதால் நாசிவன் வீட்டை ஏக வசனத்தில் வசை பாடிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தாள். அப்பாவை இன்னும் காணோம். எனக்கேன்னவோ அப்பா வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை. அவரது சைக்கிள் கடகட வென ஆடிக்கொண்டு வருவது சுப்பிரமணி வீட்டுக்கு வரும்போதே தெரிந்துவிடும். பூனை இப்போது பொடக்காளியில் வந்து கக்கிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. ஆத்தாவை கூப்பிடலாம் என்று நினைத்து வேண்டாமேன அம்மாவிடம் கத்தினேன். எனக்கு முன்னாள் எண்பது வயது ஆத்தா ஓடிப்போனாள். வெள்ளையும், சிவப்பும் கலந்த நிறத்தில் கக்கிக்கொண்டே இருமியது. அது இருமுவதைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. என்னுடைய கதாநாயகன் என்முன்னால் சாவதை விரும்பவில்லை, வருத்தமாய் இருந்தது. சிலையேன இருவரும் அந்த இடத்திலேயே நின்னு இருந்தனர். ஆத்தா மறுபடியும் கருப்பணசாமியை வேண்டி திருநீறு போட்டாள். அப்பாவின் சைக்கிள் சத்தம் கேட்டு, ஓடிப்போய் அவர் வீட்டுக்கு வருவதற்க்கு முன்னால் விசயத்தை சொன்னேன். அவர் பெரிதாக எதையும் அலட்டிக் கொள்ளவில்லை.

அப்பா வந்ததும் ஆத்தாவும் அம்மாவும் அங்கிருந்து நகர்ந்தனர். அப்பா, ஆத்தா அழுதிருப்பதைக் கண்டுகொண்டார். பொடக்காளிக்குள் போய்விட்டு சில நொடிகளில் திரும்பி வந்தார்.
லே ஈஸ்வரி பூனை இந்த இராவ தாண்டுச்சு பொளச்சுக்கும் ஆமா என்றார் அப்பா. அது அம்மாவுக்கு சொன்னதா இல்லை ஆத்தாவுக்கு சொன்னதா தெரியாது.

நா அன்று அப்பாவோடு கட்டல் போட்டு வெளியே படுத்துக்கொண்டேன். அம்மாவும் பாயில் எங்களோடு பக்கத்தில் படுத்துக்கொண்டாள். துக்கம் கேட்டு வந்த இரண்டோருவரிடம் அப்பா பேசிக்கொண்டிருந்தார். ஆத்தாவோடு சண்டையிட்டதாலும், மனதளவில் தைரியம் தேவையாலும் அப்பாவின் பக்கத்தில் படுத்துக்கொண்டேன் இல்லை என்றால் ஆத்தாவோடு கயிற்றுக் கட்டிலில்தான் படுக்கை. தென்னை சட்டம் மேல் அடுக்கப்பட்ட ஓடுகள் இன்றி நட்சத்திரத்தையும், நிலவையும் பார்த்து தூங்க கஸ்டப்பட்டேன். அப்பா பேசுவது மெதுவாக எங்கோ போய்க் கொண்டிருந்தது. அப்பொழுது ஆத்தா விம்மி அழும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.      
   
இது மூணாவது பூனை. முத பூனை இதே மாதிரி விசத்த தின்னு மண்டயப் போட்டிருச்சு, இரண்டாவது எங்க போச்சுன்னே தெரியல. காணாம போச்சு. ஆனா ஒன்னு, இது வந்ததுக்கு அப்புறம் எலித் தொல்லை சுத்தமாவே இல்லை. அது எப்படித்தா பிடிக்கும்னு தெரியாது, இரா புறாமும் அலைஞ்சு பிடிச்சுபோடும் என யாரோவோடு அப்பா பேசியதுதான் நான் கடைசியாய் அரைத்தூக்கத்தில் கேட்டது.
காலையில் பார்த்தால், அம்மா பெரியம்மா கேவிக் கேவி அழுதுகொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பா எழுப்பி இருந்தார். இன்னும் விடியவில்லை, சூரியன் மேலேழுவது போல தோன்றிற்று. அப்பாவின் முகம் சோகமாக இருந்தது. நான் கண்களை துடைத்துக்கொண்டு வீட்டிற்க்குள் போனால், பூனை நன்றாக நடந்து, என் கால்களுக்கு இடையில் வந்து மேலும் உள்ளே போக முடியாதவாறு தடுத்தது. அதை தாண்டி உள்ளே போனால் கட்டிலில் ஆத்தா வாயிம் நுரைத்தள்ளியபடி கிடந்தாள் பக்கத்தில் இரண்டு அம்மாவும் அழுதிருந்தார்கள். என்னைப் பார்த்த்தும் அம்மா எழுந்துவந்து கட்டிக்கொண்டு அழுதவாறு பாடினாள்.

இரா தாண்டுனா பொளச்சு போடுமுன்னு நினைச்சிறுந்தா
அந்த பூனை கொண்டு வந்து போட்ட பாம்பு கடிச்சு போயிட்டாளே
எ ஆத்தா. அவ என்ன நினைச்சு போனாளோ தெரியல
என்னைய அனாதையா போன்னு சொல்லி போயிட்டா
திரும்பிப் பார்த்தேன். பூனை மியாவை தாழ்ந்த சுருதியில் மியாவ், மியாவ் எனக் கத்தியது.
    

Friday, October 6, 2017

குற்றமும், தண்டனையும்

இனிமேலும் சேர்ந்து வாழமுடியுமேன தோன்றவில்லை. வெறுப்பை உமிழும் அவள் கண்கள் ஞாபகத்திற்க்கு வந்தது. ஒருவித ஈர்ப்பையும், அன்பையும் சொறிந்த அதே கண்கள்தான் நான்கு வருட திருமணத்திற்க்கு பிறகு இப்படி மாறிப் போனது. எனக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ நான் பல காரியங்களை அம்மா, அப்பாவின் ஆசைக்காகவே பண்ணியிருக்கிறேன். அதில் கல்யாணமும் ஒன்று. சொல்லப்போனால் எனக்கு இஷ்டமே இல்லை. ஒன்றை மறுக்கும் போதேல்லாம், அதைச் செய்தாக வேண்டி வற்புறுத்தப்பட்டிருக்கிறேன். பள்ளிக்கூடம் போவது, வேலைக்கு போவது என அதன் பட்டியல் நீளும். யாருக்காக இதைச் செய்கிறேன் என்று சத்தியமாக விளங்கவில்லை?  ஆனால் அது அம்மா, அப்பாவின் விருப்பம். ஏன் அது அவர்கள் விருப்பமானது என எனக்கு தெரியாது. காற்றடிக்கும் திசையில் மேகங்கள் போவதைப் போல நானும் மற்றவர்களைப் போல நகர நிர்பந்திக்கப்பட்டேன். புதிதில் இருக்கும் கவர்ச்சியும், சுவாரஸ்யமும் என்னை சில நாட்க்கள் கட்டிப்போட்டது என்னவோ உண்மைதான். தேக்கிவைக்கப்பட்ட அணையின் நீர் மட்டம் எப்படி வரவு இல்லை என்றால் வடிந்து இல்லாமல் ஆகுமோ அதே போலதான்  அந்த கவர்ச்சியும், சுவாரஸ்யமும் ஆனது.

பாடியிலிருக்கும் கம்பெனிக்கு வேளச்சேரியிலிருந்து போய் வருவதென்றால் ஆகிற காரியமா? பஸ்ஸில்தான் குடும்பம் நடத்தமுடியும். பக்கத்தில் வீடு எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னது பெரிய தவறாய் போனது. என்னையும், அம்மாவையும் பிரிப்பதற்க்காகவே நீ இப்படி செய்கிறாய் என கத்தினாள். முதல் சண்டை இப்படித்தான் ஆரம்பமானது.
கம்பெனியிலேயே கிடக்கிறாய், சூரியன் உதிப்பதற்க்கு முன்னால் போய்விட்டு, மறைந்ததும்தான் வருகிறாய். என்னோடு இருக்கவே உனக்கு பிடிக்கவில்லை. நான் வேண்டாதவளாய்விட்டேன் என அழுது அடம்பிடித்தாள். வேலை வேண்டாமேன சொல்லுவதும், சீக்கிரம் கம்பெனியிலிருந்து வருவதும், சனி மற்றும் ஞாயிறு கம்பெனிக்கு வரமாண்டேன் என சொல்லுவதும் கிட்டத்தட்ட ஒன்றுதான். உலக பொருளாதாரம் தரைமட்டமாகி கிடப்பதால், நிறைய நபர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். அதில் நாமும் ஒருவராய் ஆகக் கூடாது என எல்லோரும் பயந்த நேரம். பெரிய சண்டைக்கு அது காரணமாய் அமைந்துவிட்டது. அவள் அம்மாவும் அவளோடு சேர்ந்து ஏக வசனத்தில் என்னையும், என் குடும்பத்தையும் திட்டித் தீர்த்தார்கள்.

குடும்பம்னா அப்படி, இப்படி இருக்கத்தான் செய்யும், நாமதா அனுசரிச்சு போகனும், பொண்ணு கொஞ்சம் செல்லமா வளர்ந்துட்டா அதனால அப்படி இருக்கா, நீங்க ஒன்னும் பெருசா எடுத்துக்க வேண்டாமேன சொல்லி நாட்டாமை செய்து வைத்தனர் பெரியவர்கள்.
எனக்கு பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை, போக மாண்டேன் என அடம்பிடித்த போது, அப்பா என்னை அடித்துக்கொண்டே ஒரு கையால் தூக்கி வகுப்பறைக்குள் விசிறி எறிந்தார். அதற்க்கெனவே காத்துக்கொண்டிருந்த கதவு சாத்திக்கொண்டது. சிறையில் அடைக்கப்பட்டதாகவே நினைத்து அழுதேன். அதேபோலதான் இப்போதும் எனக்கு தோன்றிற்று. யார் இவர்கள் எல்லாம்? நீ இப்படித்தான் இருக்க வேண்டுமேன சொல்லி தள்ளிவிடுகிறார்கள்.
மனதை தேற்றிக்கொண்டு அவளோடு வாழ முயற்ச்சித்தேன். அவளோ எதாவது தவறை கண்டுபிடித்து சண்டையிட்டுக்கொண்டே இருந்தாள். முடிந்தவரை என் வாழ்நாட்க்களை கம்பெனியிலேயே கழிக்க ஆரம்பித்தேன்.

இதற்கிடையில் எங்களுக்கு அழகான ஒரு குழந்த பிறந்தது. இது சற்றே என் பெற்றோருக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இனிமேலாவது சேர்ந்து வாழ நல்ல காரணம் கிடைத்துவிட்டது என்றனர். ஆனால் விதி வேறு விதமாய் மாறி என்னோடு விளையாடியது.
ஏன் குழந்தையை நான்தா பாத்துக்கனுமா? நீங்க ஒன்னும் வேலைக்கு போய் கிழிக்க வேண்டாம். கம்பெனி வேலையை ரிசைன் பண்ணிட்டு வாங்க. இங்க யாரும் பணம் இல்லைனு அழல என்றாள்.
இதோ பாரு நீ வேண பெரிய பணக்கார குடும்பதுல பிறந்தவளா இருக்கலாம். அதுக்காக நா உங்க வீட்டுல உக்காந்து சாப்பிட முடியாது என்றேன் பதிலாய்.
அவளது குடும்பமே சேர்ந்து என்னை வீட்டை விட்டு துரத்துவிட்டது. மணி பத்து இருக்கும். தெரு விளக்கு பிரகாசமாய் எறிந்துகொண்டிருந்தது, தெருவிலிருந்த நாய் ஒன்று என்னைப் பார்த்து குறைத்தது, பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை அதுவாக ஓடிப்போய்விட்டது. பேருந்து மற்றும் காரின் முகப்பு வெளிச்சம் என் இருண்ட முகத்தை வெளிக்காட்டியது. கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை மறைக்க, கைக்குட்டையால் முகத்தை துடைப்பதைப் போல கண்களை துடைத்துக்கொண்டேன். பித்து பிடித்தவன் போல நின்றிருந்தேன். எங்கே போவது? யாரைக் கேட்ப்பது? நண்பர்கள் வீட்டுக்கு போகலாம் என்றால், அவர்களிடம் என்ன சொல்வது? வீட்ட விட்டு துரத்தீட்டாங்கன்னு சொல்ல முடியுமா? தன்மானம் இடித்தது. நேராக பஸ் பிடித்து எங்கள் கிராமத்திற்க்கே போய்விட்டேன்.

ஒரு வார காலம் மட்டுமே தங்க முடிந்தது. அதற்க்குள் எப்படி ஊர் மக்களுக்கு செய்தி கிட்டியதேன்று தெரியவில்லை, அவர்கள் வாயில் என்னை மென்றுகொண்டிருந்தனர். இனிமேலும் நம்மால் இங்கிருக்க முடியாதென்று என்ணி, சென்னைக்கே வந்துவிட்டேன். பாடிக்கு பக்கத்தில் வீடேடுத்து தங்கி, வேலைக்கு போல ஆரம்பித்தேன்.
சிறிய கண்கள், மிருதுவான விரல்கள், எச்சில் ஒழுகும் வாய், மோகன புன்னகை, என்னை தூங்கவிடவில்லை. வேலையை செய்யவும் முடியவில்லை. சுய மரியாதையை விட்டு நான் படியேறி அவள் வீட்டிற்க்கு போனேன். என் குழந்தையை காட்ட முடியாதென்று சொல்லி, ஓடிப்போ என மறுபடியும் என்னை அவர்கள் வீட்டிலிருந்து துரத்தினார்கள்.

என்ன கொடுமையான வாழ்க்கை! வேண்டாம் என்றால் விடாமல் அதில் சிக்க வைக்கிறார்கள். வேண்டுமென்றால், முடியாது என மறுக்கிற இந்த பந்தம் கொடுமையானது. பல நாட்க்கள் தூக்கம் பறிபோய், கண்கள் சிவக்க கிடந்தேன். வளமான தேகம் வற்றிப்போன நாராய் ஆனது. என்னைப் பார்க்க காசநோய் வந்தவன் போல தோன்றிற்று என நண்பனோருவன் சொன்னான். செல்பேசியின் முகப்புபடமாக என் ஒரு வயது தூரியாடும் குழந்தை இருந்தது. என்னுடைய கஹ்ட்டத்தையேல்லாம் அதனோடு விளையாடி தீர்த்துக்கொள்வேன். அந்த முகப்புபடம் கொடுத்த வழி தாங்கிக்கொள்ள முடிவதாய் இல்லை.

வக்கீல் நோட்டீஸ் அனுப்பிருந்தார்கள். அன்று இரவே அவள் தாயார் தொலைபேசியில் அழைத்து விவரங்களைச் சொன்னாள். உன்னை அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நாங்கள் வேறு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறோம் அதனால் நீ அதில் கையெழுத்திட்டு எங்களுடன் ஒத்துழைப்பதுதான் உனக்கும், எங்களுக்கும் நல்லது என மிரட்டும் தொனியில் சொன்னாள்.
என்னுடைய பிள்ளையை கொடுத்துவிடுங்கள் என்றேன்.
ம்…. எனக்கு எப்படி இத முடிக்கனும்னு தெரியும் என்று நான் பதில் சொல்லுவதற்க்குள் மறுமுனை துண்டிக்கப்பட்டது.
அம்மா அழுதாள். நீ பொறுத்துகொள்ளத்தான் வேணும், யாருக்கு இல்லாட்டியும் உங் குழந்தைக்காவது. நான் எப்பாடுபட்டாவது பேசி சரிசெய்றேன். கவலைப்படாதே என்றாள். நான் எதுக்கும் மறுமொழி சொல்லவில்லை.
எங்கள் பிரச்சனை நீதிமன்றத்திற்க்குப் போனது. அதன் பயனாய் கம்பெனி முழுக்க நான் அறியப்பட்டவன் ஆனேன். கடந்து போகும் போது யாராவது சிரித்தால், அது என்னைப் பற்றித்தான் இருக்குமோ என நினைத்துக்கொள்வேன். நான் தோற்றுப்போனதாய் தோன்றிற்று. சறுகை எப்படி சுழல் காற்று தூக்கி விளையாடுமோ, அதைப் போலதான் என்னை வைத்து வாழ்க்கை விளையாடியது. இப்போது எங்கே விழுந்தேன் என்றும் தெரியாது. என் கவலைகள் வருத்தம் எல்லாம் என் மீது சுமத்தப்பட்டிருப்பதாகவும், அதை சுமப்பதைத் தவிர வேறு வழி இருப்பதாய் எனக்கு தெரியவில்லை.
இனிமேலும் இப்படியே நான் தொடர்ந்து வாழ முடியுமேன தோன்றவில்லை. நிச்சயம் ஒரு முடிவு எடுத்தாக வேண்டியவனாக இருந்தேன். பல நாட்க்கள் யோசனைக்கு பிறகு இந்த நல்ல முடிவை எடுத்திருந்தேன். அதை யோசனை என்பதை விட உணர்ச்சி கொந்தளிப்புகளுக்கு முடிவு கட்ட எடுத்தது என்றால் பொறுத்தமாக இருக்கும்.

நான் செய்யப் போவது நிச்சயம் சட்டப்படி குற்றம்தான். அதற்க்காக எந்த நீதிபதியும் எனக்கு தண்டனை கொடுக்க முடியாது. அல்லது இந்த குற்றம் புரிவதற்க்கு காரணாமானவர்களையாவது தண்டிக்கப்படுவார்களா என்றால் அதுவும் கிடையாது. இங்கு குற்றம் செய்ய எல்லோருக்கும் உரிமையுண்டு. ஹாலிலிருந்து எழுந்து பெட்ரூம் கதவை தாளிட்டுக்கொண்டேன்.    
  

Saturday, July 29, 2017

திருக்குறள் திறப்புஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்
-    அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:71


எதேற்ச்சையாக ஆறாம் வகுப்பு புத்தகத்தில் இந்த குறளை பார்க்க நேர்ந்தது. படித்த உடன் குறள் என்னை உள்ளே இழுக்க ஆரம்பித்துவிட்டது. தாழ்ப்பாள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எங்கள் வீட்டின் இரும்பு தாழ்தான் நினைவுக்குவந்தது. வேண்டுமென்றால் போட்டுக்கொள்ளலாம் இல்லை என்றால் விடுவித்துவிடலாம். அடைக்குந்தாழ் என்ற சொல்லாடல் வேண்டுமென்றே அடைத்துக்கொண்ட ஒருவரைப் பற்றிச் சொல்கிறது போலும்.

பொதுவாக பெற்றோருடன் சண்டை வந்தால், சிறுவர்கள் அவர்களுக்கு தோன்றும் எதாவது ஒன்றைச் செய்து எதிர்ப்பு காட்டுவார்கள். சாப்பிடமாண்டேன் என அடம்பிடிப்பது, தரையில் படுத்து உருள்வது உட்ப்பட.  அன்று எனக்கும் என் பாட்டிக்கும் சண்டையேன நினைக்கிறேன். கோபத்தை எப்படி காண்பிப்பது என்று தெரியாமல் வீட்டுக்குள் சென்று கதவைச் சாத்தி தாழிட்டுப் படுத்துக்கொண்டேன், சிறிது நேரம் கழித்து திறந்தால் போகிறது என்றேண்ணிக்கொண்டேன். விளையாண்ட களைப்பு அசந்து தூங்கிக்போயிருக்கிறேன். பாட்டி முதலில் கெஞ்சிப் பார்த்திருக்கிறாள் பிறகு மிரட்டிப் பார்த்திருக்கிறாள். குச்சி வைத்து கதவை அடித்திருக்கிறாள். அது அடைக்கும் தாழகவே இருந்திருக்கிறது. பெரியம்மாவும் சேர்ந்து முயன்றிருக்கிறாள் ஆகவே இல்லை. என்னுடைய பாட்டியும் நானும் அந்த அறையில் தான் உறங்குவோம். அந்த நாட்களில் வேறு அறை கிடையாது. தவிர அவள் கட்டில் மற்றும் போர்வை உள்ளே இருக்கிறது. கண்டிப்பாக நான் திறந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தும், திறக்கவே இல்லை. சற்று நேரம் கழித்து அப்பா வந்து எழுப்பி பார்த்திருக்கிறார். ம்கூம்..எழவே இல்லை. அவருக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது.  தூங்குவது போல நடிக்கிறான் என்று எண்ணிக்கொண்டார் போலும். அதனால் கதவை வேகமாக உதைத்து, கைகளால் தட்டியும் பார்த்திருக்கிறார். கதவு திறப்பதற்க்கான அறிகுறியே இல்லை. ஒருவேளை நான் தூக்கம் கலைந்து எழுந்திருந்தால், என் நிலை மிக மோசமாக இருந்திருக்கலாம் என்று மறுநாள் காலை பெரியாம்மா சொல்லித்தான் தெரியும். காரணம் அவர் கோபம் அப்படி. நடுநிசி நேரம் இருக்குமேன நினைக்கிறேன், என் அம்மா கல்யாணத்திற்க்கு போய்விட்டு வந்து, என்னை அழைத்தாள். அவள் அழைப்பது சற்று வித்தியசமானது. மகேந்துப்பையா.. எங்கே தூக்கம் போனது என்று தெரியவில்லை. எழுந்து தாழ்ப்பாளைத் திறந்துகொண்டு அம்மாவிடம் ஓடினேன். மறுநாள் காலை எவ்வளவு சொன்னாலும் யாரும் நம்புவதாய் இல்லை. அதேப்படி கதவ தட்டி, உதச்சு, சத்தப் போட்ட கேக்கல, உங்க அம்மா வந்து கூப்பிட்ட உடன் கேக்குது? என்றுதான் கேட்டார்கள். அதற்க்கு இதுதான் பதில் போலும். அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும்தாழ்.  

இதே குறள் வேறோரு இடத்திலும் பொருந்துவதாய் தோன்றுகிறது. கோபம் கொண்ட மனைவி, தன் கணவனிடம் பேசாமல் இருக்கிறாள். அந்த வேளையில் அன்பானவருக்கு வரும் துன்பத்தை அவளாள் தாங்கிக்கொள்ள முடியாதவளாய், அழுது பிறகு பேசியேவிடுவாள். ஊடலிலிருந்து, கூடலுக்கு போகும் மையப்புள்ளியை சுட்டுகிறது இந்த குறள். போபத்திலிருந்து பாசத்திற்க்கு மாறப்போகும் ஒரு கண நேரம் இந்தக் குறள். எந்த நாள், எந்த நேரம், எந்த புள்ளியில் குழந்தை வாலிபனாது, வாலிபன் கிழவானான் என்று சொல்ல முடியாதோ. அதைப் போன்ற ஒரு புள்ளியைப் பற்றி சொல்கிறது இந்தக் குறள். அவள் ஊடலில்தான் இருந்தால், அது எப்படி கரைந்து மாறுகிறது என்பதைச் சொல்கிறது. அவன் மீது கொண்ட அன்பும், கதவின் அடைக்கும்தாழும்  எதிர் எதிர் திசையில் ஒன்றுக்கொன்று போரடுகிறது. அன்பாவனின் துன்பம் ஒரு வினையூக்கி போல, நேம்புகொல் போல. அது அன்பை அடைக்கும்தாழிலிருந்து விடுவிக்கிறது. அன்பு எங்கும் பரவுகிறது.
போர் களத்தில் எதிரி நாட்டு மன்னனைப் பார்த்து பேசும் வசனம் போல் இருக்கிறது, அன்பிற்க்கும் உண்டோ

Sunday, June 25, 2017

பல்லவர்களின் பாதை – 1

மழை பெய்ந்து ஓய்ந்த அடுத்த நாள், உச்சி வெய்யிலில் நண்பர்கள் ஐவர் மகேந்திரவாடியை நோக்கி இருசக்கர வாகனத்தில் கிளம்பினோம். தாம்பரத்திலிருந்து மண்ணிவாக்கம் வழியாக பெங்களூர் நெடுஞ்சாலையை திருப்பெரும்புதூரில் பிடித்தோம். கிட்டத்தட்ட நாற்ப்பது கி.மீட்டர் தூரம் அந்த சாலையிலேயே பயணித்தோம். காஞ்சிபுரத்தை இணைக்கும் சாலைக்கு அடுத்த கொஞ்ச நேரத்திலேயே வலதுபுறம் திரும்பி, கிராமப்புறச் சாலையின் வழி நகர முற்ப்படும் போதுதான் மதிய உணவைப் பற்றி எண்ணம் எழுந்தது. வேறு வழியின்றி நெற்க்கதிர்கள் பூத்துக்குலுங்கிய சாலையினூடே வாகனம் சீறிப்பாய்ந்தது.

உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனேகமாக எல்லோருக்கும் தலை வலிக்க ஆரம்பித்தது. பிள்ளையார்பட்டி கிராமத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, தண்ணீர்ப் பாட்டிலும், பிஸ்க்கட் பாக்கெட்டும் வாங்கி சாப்பிட்டோம். பக்கத்தில் ஹோட்டல் எங்கே என்று கேட்டதற்க்கு, இன்னும் மூன்று கி.மீட்டர் தூரத்தில் இருப்பதாக அங்கிருந்த விடலிகள் சொன்னனர். பிஸ்க்கட் வேண்டாமேன நண்பர் ஒருவர் இதைக் கேட்டு மறுத்துவிட்டார். கூகுள் மேப்தான் எங்களுக்கு வழிகாட்டி. மணப்பாக்கம் வந்ததும் சற்றே பெரிய ஊர் என்று தோன்ற வைத்தது, பட போஸ்டர்கள் மற்றும் கடைகளும்தான். மேப்பைப் பார்த்து குழம்பிவிட்டவர், இன்னும் ஒரு கி.மீட்டர்தான் என்று சொல்லவும் வண்டிகள் நிற்க்காமல் நகர்ந்தது. அதற்க்கு மற்றொரு காரணமும் உண்டு. வழியில் பார்த்த நான்கு ஹோட்டலும் பீப் பிரியாணி என்று முகப்பில் எழுதிப் போட்டிருந்தது.

கொஞ்ச தூரம் நகர்ந்த பிறகுதான் தெரிந்தது, இன்னும் ஆறு மைல் போகவேண்டுமென.

நா இன்னும் லெப்ட் திரும்ப ஒரு கி.மீட்டர்னு சொன்ன. கோயில இல்ல என்றார் நண்பர்.

அடப்பாவி ஏற்க்கனவே பசி மயக்கமா இருக்குது, இவ வேற படுத்தறானே என நொந்து கொள்ளவும், தார் சாலை முடியவும் சரியாக இருந்தது.

சட்டென முன்னால் போன வண்டி நின்றுகொள்ள, ஏன் எனக்கேட்டேன்.

முகத்தை சற்றே கோபமாக வைத்துக்கொண்ட நண்பர் சொன்னார், வலப்பக்கமா போகனும்.

வண்டி கற்க்களிலும், குழிகளிலும் குதித்துப்போனது. ஊர் முழுக்க நெற்ப்பயிர் பயிரிட்டு, பார்க்கவே செழிப்பாய் இருந்தது. வழி முழுக்க குளம்தான். நீர் ஊரைவிட்டு ஓடவே முடியாதுபோல.

மீண்டும் தார் சாலை ஆரம்பித்த கொஞ்ச தூரத்தில் வாகனத்தை நிறுத்தினர். திரும்பிப் பார்த்த போது, சின்ன பெயர் பலகையில் டிப்பன் மற்றும் லன்ச் என்று எழுதப்பட்டிருந்தது சற்றே அதிசியத்தை விளைவித்தது.

பக்கத்தில் விநாயகர் கோயில் என்றே நினைக்கிறேன், வீடுகள் ஒன்றும் அதிகமாக காணோம். இந்த கடை எப்படி ஓடும்?

சிக்கன் பிரியாணி மட்டும் தா இருக்காம். நாம போகலாம் என்றார் கடைக்குள் போய்விட்டு வந்த நண்பர்.

அட……ஏன் சிக்கன் பிடியாணி சாப்பிட மாண்டீங்களா? என்றேன்.

அதுக்கில்ல..கோயிலுக்கு போறோமில்ல அதான் என இழுத்தார்.

கருப்பணசாமி கோயிலுக்கு கெடா வேட்டி சாப்பிடறதில்லை. பசி வந்தா அதெல்லாம் பார்க்கக்கூடாது, எனச் சொல்லி கடைக்குள் நுழைந்தோம்.

சரியாக ஐந்துபேர் மட்டும் சாப்பிடுமளவு கடை இருந்தது. வெங்காயத்தை தயிரிலிட்டு, ஒரு தட்டில் பிரியாணியை வைத்து விழுங்கினோம். ஊர் பெயர் கோடம்பாக்கம் என அந்த ஹோட்டல் போர்டில் எழுதி இருந்ததைப் பார்த்து சிரித்துக்கொண்டோம். வெறும் நாற்ப்பது ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி அதிலும் இரண்டு பீஸ் வைத்துகொடுத்தது மிக்க மகிழ்ச்சி.

சற்றேறக் குறைய ஒரு கி.மீ தூரத்தில் சாலையிலிருந்து போகும் போதே கோயில் கண்களில் சிக்கியது. கம்பி வெளிகளால் சிறைபிடிக்கப்பட்டு கிடந்தது. நான்கு வாலிபர்கள் குகை கோயிலின் உள்ளே தாயம் விளையாடிக்கொண்டிருந்தது, ஒருவித ஆத்திரத்தை கிளப்பியது. வேறு வழியில்லை சகித்துக் கொள்வதைத் தவிர. தனியாக கிடந்த பெரிய பாறையின் உள்ளே செதுக்கி அந்த குகையை அமைத்திருக்கிறார்கள். ஒருவேளை பாறையை உருட்டி இங்கே கொண்டுவந்தார்களா? இல்லை இங்கேயே இருந்தா என சந்தேகம் வருமாறு இருந்தது.இரண்டு தூண்கள் எண் பட்டக வடிவில் செதுக்கப்பட்டு அதன் மேலும், கீழும் தாமரை மலர்களை செதுக்கியிருந்தார்கள். இரண்டு தூண்கள் முகப்பில் செதுக்கப்பட்டு அதன் மேலே துதிக்கையை வளைத்தது போல காணக்கிடைத்தது. இரண்டு அடிவிட்டு அடுத்த தூண்கள் நேர் வரிசையில் முகப்பு தூண்களுக்கு இணையாக. அடுத்த இரண்டு அடியில் கற்ப்பகிரகம். கற்ப்பகிரக சுவரில் துவார பாலகர்கள். லட்சுமி நரசிம்மர் உள்ளே இருந்தார். கோயிலின் இடதுபக்க சுவரில் கல்வெட்டுக்கள் பிராமி வடிவில் காணக்கிடைக்கிறது.

கற்க்களாலும், செங்கற்க்களாலும், மரங்களாலும் கோயில்கள் தமிழகத்தில் கட்டப்பட்டிருந்தது. இவற்றில் ஏதாவது ஒன்றை உபயோகிய்த்தால் அதற்க்கு தூயது என்றும், இவற்றில் ஏதாவது இரண்டை உபயோகிய்த்தால் அதற்க்கு கலப்பு என்றும், இவற்றில் இரண்டுக்கு மேல் உபயோகிய்த்தால் அதற்க்கு பெருங்கலப்பு என கட்ட்ட கலை நூல்கள் விமானத்தைக் குறிப்பிடுகின்றன. இந்த கோயில்கள் எல்லாம் அழிந்துவிடக்கூடியவை. கற்க்களைக் குடைந்து பல்லவ மன்னர்கள் கட்டிய இவை இன்றும் நின்றுகொண்டிருப்பவை.

தமிழகத்தின் இருண்ட காலமேன அழைக்கப்படும் முதல் மூன்று நூற்றாண்டிற்க்கு பிறகு எழுச்சி பெற்ற பேரரசு இந்த பல்லவர்கள். அதில் பிற்க்காலப் பல்லவர்கள் மிகவும் சிறப்புற்று விளங்கினர். அதில் முதலாம் மகேந்திரவர்மன் முக்கியமானவன் (600-630) . அவன் தான் இந்த குடைவரைக் கோயில்களை முதன்முதலில் தமிழகத்தில் மண்டகப்பட்டு என்னும் இடத்தில் அமைத்தான். முதலில் இவன் சமண மதத்தை தழுவியும் பிறகு அப்பர் பெருமகானால் சைவனாக மாற்றப்பட்டான்.

சமண மதத்தைச் சேர்ந்த பிட்சுக்கள் குகைகளில் வசித்து வந்தனர். எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல, அவர்கள் தங்கி கல்வி அளித்த இடத்திற்க்கு பெயர்தான் பள்ளி. அதனால்தான் பள்ளிக்கூடம் என்றே பெயர் வந்தது. கோயில் கட்டும் பழக்கம் திராவிடர்களுக்கு தொன்று தொட்டு வந்த ஒன்று. முதலில் அது இறந்தோர் கல்லறையாக இருந்து, பிறகு வணக்கத்திற்க்கு உரிய கோயிலாக உருமாறியது. சமணர்கள் அதனை பார்த்து கோயில் என்ற ஒன்றை தாங்கலும் அமைத்தனர். குகைகளிலே அவர்கள் தங்கி, கல்வி புகட்டி பிறகு கோயிலையும் அமைத்துக்கொண்டனர். மகேந்திரவர்மன் அதனைக் கண்டு, தானும் குகைக்கோயிலை அமைத்தான். பிறகு அது வளர்ச்சி அடைந்து தஞ்சாவூர் பெரிய கோயிலாய் திராவிட கலைக்கு மகுடமாய் விளங்குகிறது. இது பெருமளவு பிற்க்கால சோழர்களால் முன்னேடுக்கப்பட்டது.

சிறிது நேரம் கோயிலை சுற்றிப் பார்த்தோம். நண்பர்கள் புகைப்படமெடுத்தனர். துவார பாலகர்கள் சிலை திகிலமடைந்து கிடந்தது. தாயம் விளையாடும் அவர்களை முறைப்பது போல தோன்றிற்று. மகேந்திரவர்மனுக்கு மட்டும் தெரிந்தால் என்ன ஆவது?

அங்கிருந்து மாமண்டூர் முப்பத்தி எட்டு கி.மீட்டர் மட்டும் தான். போய்ச் சேர நாலரை மணி ஆகியிருந்தது. கூகிள் மேப் வழியில் ஊருக்குள் புகுந்தால் முட்டுச் சந்து. வீட்டின் உள்ளே இருந்த பாட்டி வலப்பக்கம் போகச் சொல்லி கைகாட்டினால். அது ஒத்தை அடிப்பாதை. வண்டியை அதில் செலுத்த, மண்ணில் மாட்டிக்கொண்டு, முனகி மண் பாதையை அடைந்தது. அது நேராக ஒரு அம்மன் சன்னதிக்கு கொண்டு சேர்த்தது. பக்கத்தில் வெளியிடப்பட்ட மலை தெரிந்தது ஆனால் போக வழி தெரியவில்லை. நல்ல வேளை இன்னோரு பாட்டி வந்து, கோயில் பிரகாரத்தை சுற்றி, கால்வாயை கடக்க வேண்டுமேன வழி காட்டினாள்.

நான்கு குகைவரைக் கோயில்கள் இருந்தது. முதலாவது கோயில் கிட்டத்தட்ட மகேந்திரவாடியை ஒத்திருந்தது. பெரிய வேறுபாடுகள் ஒன்றும் இல்லை. அதன் முகப்பில் மட்டும் வண்ண தூரிகையில் அலங்காரம் பண்ணப்பட்டுயிருந்தது, பிற்க்காலத்து வேலைப்பாடக இருக்கலாம். கிட்ட்த்தட்ட அது அழிந்துவிட்டிருந்தது. கருவறை காலியாக இருந்தது.

அடுத்த கோயில் சற்றே பெரியதாக இருந்தது. மூன்று கருவறைகள் கொண்டது. நடுவில் சிவ லிங்கமும், இரு கருவரையும் காலியாக கிடந்தது. குறிப்பிடும் படியாக இந்த கோயிலின் கருவறை படிக்கட்டுகள் தும்பிக்கையின் வடிவில் இருபுறமும் செதுக்கப்பட்டிருந்தது. பிற்க்கால படிக்கட்டுகளுக்கு இது ஒரு அடிப்படை ஆகும். தீர்த்தம் செல்ல குழி கற்ப்ப கிரகத்திலிருந்து, முகப்புவரை காணக்கிடைக்கிறது. மகேந்திரவர்மனின் கல்வெட்டு ஒன்று இதன் இடதுபுற சுவர்களில் காணக்கிடைக்கிறது. அவன் மத்தவிலாசம் என்னும் நூலை இயற்றியதற்க்கான சான்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வடமொழியில் அவன் வல்லவனாக திகழ்ந்தான். பிற்க்கால பல்லவர்கள் காலத்தில்தான் கல்வெட்டுகளில் தமிழ் மொழி உபயோகப்படுத்த ஆரம்பிக்கப்பட்டது.

மூன்றாவது கோயில் இன்னும் முழுமை பெறாத நிலையில் இருக்கிறது. அதிலும் மூன்று கற்ப்பகிரகம் இருக்கிறது, மேலும் இருக்கலாம். கோயிலைச் சுற்றி வருமாறு கோயிலை குடைய முற்ப்பட்டு அது பாதியில் நிறுத்தப்பட்டது போல இருக்கிறது. மற்ற கோயில்கள் பாறைகளைக் குடைந்து கற்ப்ப கிரகத்தோடு நிறுத்திவிடுவார்கள். நான்கு கோயில்களிலேயே இது பெரிய கோயில். ஆனால் தூண்கள் எல்லாம் சிதைந்து கிடக்கிறது.

நான்காவது கோயில் இரண்டு தூண்கள் குடைந்துவிட்டு, மூன்று கற்ப்பகிரகம் குடைய ஆரம்பிக்கப்பட்ட உடன் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறது. இது அம்மன்ன்னின் கடைசி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகிறார்கள்.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சொன்னதுதான் ஞாபகத்திற்க்கு வருகிறது. நமது மன்னர்கள் நமக்கு விட்டுச்சென்ற சொத்து என்றால், இரண்டு.  ஒன்று கோயில்கள் மற்றது குளங்கள். ஆம் உண்மைதான். தமிழகமே காய்ந்துகிடக்க. இந்த பகுதியில் மட்டும் பச்சை ஒளிர்கிறதேன்றால். நான் கடந்து வந்த குளங்களே அன்றி வேறுதுமில்லை. மகேந்திடரவாடியில் மகேந்திரதாடகம் அவன் தருவித்த முக்கிய குளம் என்றால் மாற்றுக் கருத்தில்லை.

மணி ஆற்றையை நெருங்கிவிட்டிருந்த்து. வீடு வந்து சேர எட்டரை மணியானது.
           
குறிப்புக்கள்:
பல்லவ மன்னர்கள் – இராச மாணிக்கனார். 

Monday, March 20, 2017

பார்த்தசாரதி நகர உலா

பார்த்தசாரதிக்கு தீடிரென சென்னை நகரை உலா வர வேண்டுமென ஆசை வந்துவிட்டது. மீசையை நீவிக்கொண்டே கற்ப்பகிரகத்தை விட்டு வெளியேறினார். நிலவொளியில் கோயில் பிரகாரம் ஜொலித்தது. மூடியிருந்த கதவின் இடைவெளியில் புகுந்து அர்த்த மண்டபத்தில் வந்து நின்றார். பிறகு என்ன நினைத்தாரோ தெரியவில்லை இடப்பக்கமாக திரும்பி தெப்பக்குளத்தின் வழியாக நகருக்குள் பிரவெசிக்க நகர்ந்தார். தெப்பகுளத்தை ஒட்டியிருந்த கக்குஸ் வாடையில் திக்குமுக்காடினார். மூக்கை பிடித்துக்கொண்டு வேகமாக கடக்கும் போது ஒரு கான்ஸ்டபில் அவரை லத்தி முனையில் நிறுத்தினார்.  

யார் நீ? சந்தேகமாக அவரை கேட்டார் கான்ஸ்.

திருவல்லிக்கேனி பார்த்தசாரதி என்றார் பார்த்தசாரதி.

எங்க போய்டு வற்ற? ம்.. அதட்டினார்.

கோயில்லே இருந்து வற்றேன்.

இன்னாரத்துல கோயில்லேன்ன வேலை? திருடிட்டு வற்றயா? கான்ஸ் கோபமாய் பார்த்தசாரதியை கேட்டார்.

இல்லை கோயில்ல நின்னிருந்த..

மேலும், கீழுமாய் கான்ஸ் பார்த்தார். நிச்சயாமாய் இது கேஸ்தான் என மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

பார்த்தசாரதியோ, என்னடா இது? குளக்கறையைத் தாண்டி போக முடியலையே என வருத்தப்பட்டார்.

நடை சாத்துனதுக்கி அப்புறமா கோயில்ல என்ன பண்ணிக்கிட்டு இருந்த? சட்டை, பை எல்லாத்தையும் திறந்துகாட்டு. லத்தியை ஓங்கி மிரட்டிக்காட்டினார்.

உங்களுக்கு என்ன வேண்டும் என பார்த்தா மெதுவாக வினவினார்.

ம்ம்..ஒரு கோடி ரூபா கொடேன்..எகத்தாளமாய் சொல்லிவிட்டு, சிகெரட்டை பற்ற வைத்தார் கான்ஸ்.

பார்த்தா தனது இடது பாக்கெட்டில் கையைவிட்டு புது இரண்டாயிரம் ரூபாய்க் கட்டாய் கான்ஸ் கைகளில் திணித்தார்.

வாயிலிருந்த சிகரேட் நழுவது தெரியாமல், கான்ஸ் அப்படியே மலைத்துப்போய் நின்றிருந்தார். பணத்தையே அவர் வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றுருந்தார்.

இதுதான் நல்ல சமயமென நினைத்து, மெல்ல நழுவி நகருக்குள் நுழைந்தார் பார்த்தா. உதடுகளில் லிப்டிக் போட்டு, சேலையை இடுப்புக்கு கிழே கட்டியிருந்த பெண் ஒருத்தி இவரையே பார்த்து சிரித்தாள். இவர் பதிலுக்கு சிரித்தார். மோகன புன்னகை. அவ்வளவுதான், அவள் பக்கத்தில் வந்துவிட்டாள்.

என்னய்யா! ஆயிர்ரூபா..என்றாள்.

கடவுள் சிரித்தார்.

எண்ணூரு…

மறுபடியும் சிரித்தார்.

கடசியா சொல்லு எவ்வளவு தா தருவனு? அவள் சற்று ஏமாற்றம் கொண்டவளாய் கேட்டாள்.

அதற்க்குள் போலீஸ் சீப் ஒன்று சீறிக்கொண்டு அவர்களுக்கு பக்கத்தில் வந்து நின்றது.

இவனுக வேற வந்துடானுக..தலையில் அடித்துக்கொண்டாள்.

அதே கான்ஸ்ம், இன்னும் நான்கு போலீஸ்சாரும் வண்டியிலிருந்து இறங்கினர்.

சார் இவன்தா நா சொன்ன ஆளு என கான்ஸ் பார்த்தாவை அடையாளம் காட்டினார்.

கோடி ரூபா வச்சிருக்கிறாங்கிறவன், போயும் போயும் தெருவுல நிக்கிறவகிட்ட பேசிக்கிட்டு இருக்கான்? நிசமா இவனதா பார்த்தயா என்றார் இன்ஸ்.

பார்த்த ஓடிவிடாமல் இருக்க நாலாபுறமும் போலிஸார் நின்றுகொண்டனர்.

 இன்னும் எத்தனை கோடி வச்சிருக்கடா. ...என்றார் இன்ஸ்.

வயிற்றில் கையை வைத்துக்கொண்டு அடக்க முடியாமல்  சிரிக்கத்தொடங்கினாள்.

இன்ஸ் கோபம் தலைக்கேறி அவள் வயிற்றின் மேலே பூட்ஸ் காலால் ஒரு மிதி வைத்தார்.  கீக் என்று கத்திக்கொண்டு அவள் தரையில் சாய்ந்தாள்.

கோபத்தால் அவர் தலையை பறக் பறக்கெனச் சொறிந்தார். சிவப்பு நிற கொண்டை விளக்கு அவர் முகத்தில் அடித்து சிவப்பாய் காட்டியது. ஆள் பார்க்க நல்ல ஆஜானுபாகுவான அனுமார் மாதிரி இருந்தார். அவளிடமிருந்து சத்தமெயில்லை.

 கான்ஸ் போய் அவள் மூக்கில் நடுவிரலை வைத்துவிட்டு, தொப்பியை கழட்டியவாறு இன்ஸிடம் வந்து, போய்டாரு சார் என்றார்.

நால்வரும் ஓடிப்போய் அவளை சோதனை போட்டனர். இன்ஸ் நகத்தைக் கடித்து துப்பினார்.

பார்த்தா மறுபடியும் நழுவ வாய்ப்பு கிடைத்ததும், தப்பி நகருக்குள் ஓடிவிட்டார்.

கால் போன போக்கில் நடந்தார். வழியில் வெளிச்சத்தைப் பார்த்ததும், உள்ளே புகுந்துவிட்டார். அங்காங்கே தூங்குபவர்கள், அரைத்தூக்கத்தில் செரில் உட்காந்திருப்பவர்கள், இரயில் தாமதமானதை தாங்காமல் நடந்துகொண்டிருப்பவர்கள் என இருந்தது சென்ரல் இரயில் நிலையம். பார்த்தா தூங்கும் கூட்ட்த்தில் கால் வைத்து போகும் போது யாரோ ஒருவன் மேல் கால் வைத்துவிட்டார். அவன் தூக்கத்திலிருந்து எழுந்து அடிக்க ஓடிவந்தான். பார்த்தா தப்பி வந்த வழியே வெளியேறினார். அவர் வெளியேறவும், போலீஸ் சீப் வரவும் சரியாக இருந்தது. துரத்தி வந்தவன் சட்டென நின்றுகொண்டான். பார்த்தா இடப்பக்கமாக வளைந்து லோக்கல் இரயில்வே ஸ்டேசனுக்கு ஓடினார். சிவப்பு நிற வெளிச்சம் கொஞ்ச நேரம் அவரை பின் தொடர்ந்தது. துரத்துவது ஓய்ந்த்தும், அவர் பாலத்தைக் கடந்து பார்க் ஸ்டேசனுகுப் போனார்.

ஸ்டேசன் படிகளில் ஏறும்போது பிச்சைக்காரன் ஒருவன் தருமம் பண்ணச் சொல்லி மன்றாடினான். சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி, பசி தாங்க முடியல என காலைப் பிடித்துகொண்டான்.
பார்த்தா தன் வலது பக்க பாக்கெட்டில் கைகளை விட்டு சில ஐநூறு ரூபாய் கட்டுக்களை பாத்திரத்தில் இட்டார். அவ்வளவுதான் தாமதம், பார்த்தாவின் காலை அவன் வாரிவிட்டு அவர் மேல் ஏறிக்கொண்டான். வைத்திருந்தா பாத்திரத்தாலே பார்த்தாவை நய்யப் புடைத்தான். வலது, இடது என எல்லா பாக்கெட்டையும் தேட ஆரம்பித்தான். எதுவும் கிடைக்காத்தால், பக்கத்தில் கிடந்த கல்லை தூக்கிக் காட்டி மிரட்டினான்.

இன்னும் எங்க பணத்த வைச்சிறுக்க சொல்லு சீக்கரமா..என கத்தினான்.

போலிஸ் சீப் கொண்டை விளக்கோடு அவர்கள் அருகில் வந்து நின்றதுதான் தாமதம், பார்த்தா அவனை கீழே தள்ளிவிட்டு ஓட ஆரம்பித்தார். பிச்சைக்காரன் போலீஸ் சீப்பின் சத்தத்தில் பய்ந்த சந்தர்ப்பம் அவருக்கு சாதகமாய்ப் போனது.

 பிச்சைக்காரன் தட்டிலிருந்த பணத்தை இன்ஸ் எடுப்பதும், அவன் விட்டுக்கொடுகாமல் சண்டைக்கட்டுவதும், அவர் ஓடும் போது திரும்பி பார்த்த்தில் தெரிந்தது.

போதும் நகர் வலம் என பார்த்தா முடிவு செய்வதற்க்குள் நகரம் காலை வேலைகளை ஆரம்பிக்கத் தொடங்கியது.

வந்த கலைப்பை ஆற்ற, பார்த்தா டீக்கடையில் போய் சூட டீ சொல்லி காலார பென்ஞ்சில் அமர்ந்தார்.

எதேர்ச்சாய் அவர் பார்வை கடை போஸ்டரில் விழுந்தது.

சீரியல் கில்லர் – விபசாரி மற்றும் பிச்சைக்காரனைக் கொன்றுவிட்டு தப்பி ஓட்டம். குற்றவாளி பெயர் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி. போலீஸ் தனிப்படை அமைத்து தேடல்.
 
இதைப் பார்த்ததும், பார்த்தாவுக்கு பகீர் என்றது. டீக்கடையில் இருந்து எழுந்து கோயிலுக்கே போய்விடலாம் என நகர்ந்தார். டீக்கடைக்காரன் அவரை வசை மொழிகளில் திட்டுவதை எல்லாம் கவனித்தவராய் தெரியவில்லை.

தெப்பக்குளத்தின் மேற்க்கு வாசல் வழியாக பிரகாரத்துக்குள் நுழைந்தார். மணி எட்டு இருக்கும். சூரியன் எழுந்து எல்லோரையும் சுட்டுக்கொண்டிருந்தான்.

அவர் நேராக கற்ப்பகிரகத்திற்க்குள் போக முற்ப்படும்போது தடுக்கப்பட்டார்.
இது ஸ்பேசல் தரிசனம். டீக்கெட் வாங்குனாத்தா இந்த வழி. போ போயி அந்த வரிசைலை நில்லு என் அங்கிருந்த ஆசாமி துரத்தினார். பார்த்தா என்ன செய்வது என்று தெரியாமல் தர்ம தரிசன வரிசைக்கு நகர்ந்தார்.  

இன்ஸ்ம், கான்ஸ்ம் அங்கு ஸ்பேசல் தரிசனத்தில் நின்று எதையோ வேண்டிக்கொண்டிருந்தார்கள்.