Pages

Thursday, October 29, 2015

நான் யார்? பகுதி-2


 ஒரு மேகம் மட்டும் தனித்து விடப்பட்டிருந்தது. அதைப் பார்க்க தீவு போல தோன்றிற்று. கைவிட்டு விட்ட திறளான மேகக்கூட்டம் தூர நின்று அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. தனித்துவிடப்பட்ட மேகம் அங்கும் இங்கும் அலைபாய்ந்தது. சூரியன் மேகக்கூட்டத்திற்க்குள் ஒழிந்து கொண்டு, தன் கதிர்களால் கொரில்லா முறை தாக்குதலை என் மீது தொடுத்தான். சிமென்ட் அட்டை மேய்த இரயில் நிலைய பிளாட்பாமின் சிறு சிறு ஓட்டைகளின் வழியாக கொஞ்ச நேரத்திற்க்கு முன்னரே பெய்த மழைத்துளி என் கைகளை பதம் பார்த்தது. அன்னாந்து பார்த்தேன். பக்கத்தில் தண்ணீர் உட்காந்திருந்ததால் மேலும் நகர முடியாத நிலைமை. சூரியன் சுடும் போது முதல் முறையாக மழைத்துளியால் நனைந்தேன் மற்றவரெல்லாம் வேர்வையில் நனையும் போது.
இரயில் நிலையம். மக்கள் கூட்டம் நிறைந்து, நின்றிருந்தனர், ஒரே ஒரு இரயில் மட்டும் கிளம்பியது. ஒருவர் மூன்று பெட்டிகளை தூக்கமுடியாமல் கஷ்டப்பட்டு ஊர்ந்துவந்தார். பொர்ட்டர் வெறும் கைகளை வீசிக்கொண்டு அவருடனே வந்தார். அந்த காட்சி என்னை ஆச்சரியப்படுத்திவிட்டது. இருவரும் என்னை நெருங்கி வந்தனர்.
சார் இதுக்கு மேல எவ்வளவு கமியா தருவ? என்ற கேள்வியை எழுப்பியவாறு பொர்ட்டர் தொடர்ந்தான்.
பதில் எதும் வருவதாய் தெரியவில்லை. மௌனமாக அவர் தன் பெட்டிகளுடன் கண் மறைந்து சென்றார்
கிளம்பிய இரயில் வேண்டும் மற்றும் வேண்டாம் என்ற இரு ஸ்டேசனுக்கு இடையில் என் மனதை அதிர வைத்திக்கொண்டு, என் மனதுக்குளேயே ஓடுவது மாதிரி இருந்தது. முடிவுகளை எடுத்துதான் இங்கேயே வந்தேன். இருந்தும் மனம் இரயில் பயணங்களையே மேற்க்கொண்டது.
என் செல்போனில் வந்த அந்த அழைப்பு வேர்வைக்கு அழைப்பு விடுத்தது. ஆங்கில எழுத்தினை கண்டபடிக்கு அழுத்தி பெயரை பதிவு செய்திருந்தேன்.
ஓரிரு முறை யோசித்துவிட்டு போனின் அழுகையை நிறுத்தினேன்.
“ஹலோ”, தயங்கியபடி என் வார்த்தைகள் வெளி வந்தது. யாரும் என் வார்த்தைகளை கேட்க்ககூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தேன்.
சார்.. எங்க இருக்கீங்க? சற்றேரக்குறைய சந்தேகமாக கேட்டான். 
 நார்த் பொண்ணு 6000 ரூபா. வந்துட்டு கமிச்சு எல்லாம் கேட்க்காதீங்க.. ஒரே ரேட் என்றான் அழுத்தமாக.
இவனிடம் என்ன பேரம் பேசறது இப்ப? யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது என்பதே முக்கியமாகப்பட்டது.
ம்.. சரி சரி என்று சொல்லி சுற்றும்முற்றும் ஒரு தடவை பார்த்தேன் யாரும் கவனிக்கிறார்களா என்று. பின்பு போனை பேன்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டேன்.
பயணிகள் அன்பான கவனத்திற்க்கு. வண்டி எண் 64646 விழுப்புரம் சென்னை இரயில் இன்னும் சற்று நேரத்தில் தடம் எண் 6க்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டென ஆங்கிலத்திற்க்கும், ஹிந்திக்கும் மாறி மாறி அறிவித்தாள் அந்த கணிப்பொறி பெண். எனக்கு தெரிந்த வரையில் இந்த பெண்தான் இரவு பதினொருமணி வரையிலும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் தனியாக பயமின்றி பேசமுடிகிறது.
அறிவிப்பை கேட்ட எல்லோரும் ஆவலாய் நின்ற இடத்தைவிட்டு இரண்டடி முன்னே நகர்ந்து எட்டி தண்டவாளத்தை பார்த்தனர். நான் உட்காந்திருந்த பென்ஞ்ச் இரயில் வருவதை மறைக்கும் விதமாக நிலைய அதிகாரியின் அலுவலகம் கட்டப்பட்டிருந்தது. ஆவல் தாங்கமுடியாது, என் பக்கத்தில் உட்காந்திருந்தவர் எழுந்து போய், மேடையின் விழும்பில் நின்று பார்த்தார். கோக்ககோல பாட்டலில் குழாய் தண்ணீர், பல வருடம் தலை வாராத முடி, செம்மண்ணால் கலரிங் செய்யப்பட்டதாய் இருந்தது. சட்டையும், பேன்ட்டும் பல இடங்களில் கிளிந்து போய்க்கிடந்தது. கறைபடிந்த பற்களை காட்டிக்கொண்டு எங்களை நோக்கிவந்தான். இரயிலை எதிர்பார்த்த எல்லோர்க்கும் சற்று ஏமாற்றம் தருவதாய் இருந்தது அவன் வருகை.

ஏதோ இராணுவத்தில் நடக்கும் மார்ச் பாஸ்ட் போல இருந்தது. அறிவிப்பைக் கேட்டதும் முன்னே நகர்ந்த மக்கள், பிச்சைக்காரனைப் பார்த்ததும் பின்னே நகர்ந்து கொண்டனர் அவர்அவர் இடத்திற்க்கு. பாவம் என் பக்கத்தில் உட்காந்திருந்தவருக்கு இப்பொது இடம் கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் அந்த இடத்தை நிரப்பிவிட்டார். பொது இடத்தில் இருக்கும் பெங்ஞ்செல்லாம் மியுசிக் சேர் போல தான், தவறவிட்டால் யாரோ ஒருவர் உட்காந்துவிடுவார்.
என்ன நாடுனே புரிலை. சொன்ன நேரத்துக்கு என்னதா வந்திருக்கு இதுவர? தன் இடம் பறிபோன வருத்ததை நாட்டின் மேல் கொட்டினார். சுவற்றுக்கு ஆதரவாய் தன் கையை அதன் மேல் வைத்திருந்தவரை கடந்து இடப்பக்கம் என் பார்வையை செலுத்தினேன்.
அட..அந்த பிச்சைக்காரனுக்கு இடம் கிடைத்துவிட்டதே! கால் மேல் கால் போட்டு தண்ணீர் பாட்டிலை மடியில் வைத்து உட்காந்திருந்தான். பார்க்க இளைத்துப்போயிருந்தவன் போல இருந்தான். மாம்பழத்தை உறிஞ்சிக்கொண்டு யாரோ கொட்டையை மிச்சமிட்டது போலிருந்தது அவன் தோற்றம். ஒருகாலில் பெரகான் செறுப்பு, மறுகாலில் பெட்டா செறுப்பு. அவன் அழகில் முழ்கிப்போனதால், அவனுக்கு பக்கத்தில் இருந்தவளை அதுவரை கவனிக்க தவறிவிட்டேன். வெள்ளை நிற கெட்போன் கூந்தலுக்குள் மறைந்து போனது. விரித்த கூந்தல் அவள் கண்களுக்கும் காட்சிக்கும் இடையே திரைச்சீலையைப் போல விழுவதால், அவள் கையை வைப்பரைப் போல உயர்த்தி துடைத்தால் அடிக்கொருதரம். ரொலக்ஸ் வாட்சை தெரிகிறது. உயரமான செறுப்பு, மாடனான உடை. பெஞ்சின் ஓர் முனையில் பிச்சைக்காரன், மறுமுனையில் அவள். சுதந்திரமாய் குரங்கு ஓடியது, அதன் காலில் கட்டப்பட்டிருந்த கயிறு இழுத்ததும் குரங்கு தலையை திருப்பி குறவனைப் பார்த்தது. பாவம் குரங்கு என்பதைப் போல இருந்தது அவள் பார்வை. 
கண்களை இன்னும் சிறிது நேரம் பார்த்தால் பாதிப்பை ஏற்ப்படுத்தலாம். ஒருவேளை ரிக்டர் அளவுகோளில் 8 என என் மனதின் நடுக்கத்தை காட்டும். அப்படி நடந்தால் சேதாரத்தின் அளவு அதிகமாகலாம். சட்டென சுயநினைவுக்கு வந்தேன்.
மக்கள் கூட்டம் திரும்பவும் மார்ச் பாஸ்ட் செய்ய ஆரம்பித்திருந்தது. இதற்க்கு மேல் என்னாலும் இருப்புக்கொல்ல முடியவில்லை. எழுந்து போய் நானும் தண்டவாளத்தை பார்த்தேன். இனி மேல் யாரையும் காத்திருக்க வைக்க வேண்டாமென்று வந்துகொண்டிருந்தது அந்த இரயில்.
ஒரு பெண் போனில் யாருடனோ பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்தால். இரயில் இராவனை போல் அந்தப் பெண்னின் உயிரை கவர்ந்துகொண்டு வந்தது.
அய்யோ! பலர் ஒருசேரக் கத்தினர். சிலர் அந்த உடலை நோக்கியும் ஓடினார். நான் அங்கேயே டெலிப்போன் டவர் போல நின்றேன். இதற்க்குள் இரயில் ஸ்டெசனைக்கு வந்து நின்றது. நான் சற்று தைரியத்தை வளர்த்திக்கொண்டு முன்நகர்ந்து பார்த்தேன். தண்டவாளம் முழுவதும் இரத்தம். அதற்க்குமேல் பார்க்க மனமின்றி கண்களை மூடிக்கொண்டேன். உடல் நடுங்க தொடங்கியது.
மேம் பாலம் அவள் உடல் சிதறிய இடத்திற்க்கு மேல் உற்ச்சாகமின்றி நின்றிருந்தது. என் மனதிக்குள் சட்டென இவ்வாறு தோன்றியது. சீதையை மீட்க்க கஷ்ட்டப்பட்டு பாலத்தைக் கட்டினார்கள். ஆனால் ஏற்க்கனவே கட்டி வைத்திருந்த பாலத்தில் போயிருந்தால் மீட்க்கவேண்டிய வேலையே இருந்திருக்காது. தலையிலும், உடம்பிலும் அடித்திக்கொண்டு ஒருவன் அழுதாவாறு பாதியாகிப் போன உடலுக்கு பக்கத்தில் உட்காந்திருந்தான்.
போனும் கத்த தொடங்கியது. இதுவரை கட்டி வைத்திருந்த தைரியத்தையும் சேர்த்தே இரயில் இடித்துடைத்தது.

கயிற்றால் கட்டப்பட்ட குரங்கைப் போல வீட்டை நோக்கி என் கால்கள் நடந்தது.   

Sunday, October 25, 2015

நான் யார்? பகுதி - 1


என் எண்ணங்களை போலவே அந்த தென்ன மரக்கீற்றும் நிலவை தொட்டுவிட துடித்தது. திறந்து கிடக்கும் வானம், மாற்றுத் திறனாளி நிலவு, ஆசிர்வாதங்களை பொழியும் பனி, எந்த வேளையும் சாபம் பேறப்போகும் மேகம், தலையை ஆட்டிக் கொண்டிருக்கும் மரம், இருளில் வெளிச்சத்தை தேடிக் கொண்டிருக்கும் என் இரு விழி. மிகுந்த சாமார்த்தியசாளி தான் நிலவு. நாளை கச்சேரிக்கு இன்றே பயிற்சி செய்யும் கூண்டில் அடைபட்ட பறவை. தேனில் நனைந்த காற்று, நீரைத் திருடும் கம்பரசரின் சத்தம், என்னைப் பார்த்து குறைக்கிற வாக்கிங் போகும் நாய், காற்றுக்கு ஆடும் சன்னல். இவைகள் இருந்தும் நான் தனிமையை உணர்ந்தேன்.

அதனை நான் விரும்பி ஏற்க்கவில்லை, தள்ளப்பட்டேன். அசுரத்தனமான ஓர் அலை இழுத்துக் கொண்டு வந்து சேர்த்தது. சொர்க்கத்திலே ஓர் நரகம் என்றால், அது என் மனம்தான். விபத்தில் கை, கால்களை இழந்து எத்தனையோ பேர் வாடுகிறார்கள். அதுபோல ஏதும் விபத்தில் என் மனதை இழந்தால் மிகவும் மகிழ்வேன். துன்பத்தை மட்டுமே தருகிறது இந்த மனம். தாங்கி கொள்ள முடியாத துன்பம். சித்தபிரமை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தேன்.
வாழ்க்கையை மறுபடியும் எண்ணிப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அந்த நினைவுகள் மலரை வட்டமிடும் வண்டைப் போல என்னை வட்டமிட்டது. சில சமயம் நான் ஏன் இப்படி நடந்து கொண்டேன்? கேள்விகள் என்னை குடைந்தது. இல்லை நான் செய்தது சரிதான் என மனம் வக்காளத்தும் வாங்கியது. எது சரி? எது தவறு? யார் தீர்மானிப்பார்கள்? வெட்டியாய் பேசும் இந்த மக்கள்? சமூக சட்டம்? மதம்? நாடு? புரியவில்லை இவர்கள் கோட்ப்பாடு.
நிலவு சில நேரம் மேகத்தோடு புணர்ந்து கொள்கிறது. அதன் பயனாய் நட்சத்திர பிள்ளைகளை பெற்றேடுக்கிறது. நீ இப்படித்தான் இருக்க வேண்டுமென யாரும் நிலவைக் கட்டுப்படுத்துவதில்லை. சரியான நேரத்திற்க்கு தேய்கிறது, பின் வளர்கிறது, புணர்கிறது. பொதுவான விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் வாழ்கிறது எனினும் தனக்கென ஒழுக்கத்தை கொண்டுள்ளது. யாரும் அதை அவர் அவர் நியதிக்குள் வைத்து மதிப்பிடுவதில்லை. ஆனால் மனித வாழ்க்கை அப்படிப்பட்டதில்லை.
 இன்னும் கன்னதில் கை வைத்துக் கொண்டு, வானத்தை அன்னாந்து பார்த்திருந்தேன். என் விழி நிலவு வெளிச்சத்திலே இளைப்பாறிக்கொண்டிருக்கிறது. ஒரு வித வெறுமை உணர்வை நிலவின் மேல் வீசினேன். நான் கஷ்டம் வரும்போதேல்லாம் வானத்தை பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். காரணம் ஒன்றுமே இல்லாத சூன்யத்தின் மேல்தான் சூரியனையும், மேகங்களையும், இன்னும் நிலவையும், நட்சத்திரத்தையும் கட்டி எழுப்பியிருக்கிறார்கள். அழகான நிகழ்வுகள் பகலிலும், இரவிலும் நிகழ்கிறது. ஆனால் மனிதன் அப்படியா எடுத்துக் கொள்கிறான்?
குளிரிலே என் தேகமேல்லாம் சிலிர்க்கிறது. நீரை திருடும் கம்பரசரின் சத்தம் நின்று கொண்டதும், பறவைகள் தன் பயிற்ச்சியை நிறுத்தியது. ஒருவேளை திருட்டுக்கு எதிராய் போராடுயிருக்குமோ? நாளை கவனிக்க வேண்டும் மனதுக்குள் எண்ணினேன். அடுத்த நாழிகை கொடூர நினைவுகள் மனதை அடைத்தது. மீண்டும் மனதுக்குள் வெளிச்சத்தை தேட ஆரம்பித்தேன். கும்மிருட்டு அகப்படவேயில்லை.

Thursday, October 22, 2015

கொடுக்கப்படவில்லை பறித்துக்கொள்ளப்பட்டது

இடப்பக்கம் நீண்ட சாலை, அதன் முழுவதும் யாரோ மலர்களை கொட்டி வைத்திருந்தனர். ஒருவேளை இருபுறமும் வளர்ந்து நிற்க்கும் மரங்களின் வேளையாய் இருக்கும். எவரும் அதில் பயணம் மேற்க்கொண்டதில்லை என்று சொல்கிறதா அந்த மலர்கள்?  இல்லை யாரையேனும் வரவேற்க்க காத்திருக்கிறதா? தெரியவில்லை. அது சாலையா இல்லை சோலையா? விழிகள் மெதுவாய் நடை போட்டது. வெண்ணிற கொடியில் சிவப்பு நிற இதயம் ஏற்றப்பட்டிருந்தது.பூக்கள் கொடிக்கம்பத்தின் காலடியில் கிடந்தன. இதயத்திலிருந்து வழிகிற குருதி அந்நிறத்தையே கொடுத்திருக்குமோ? எனக்கு நேர்ரேதிரே அந்த கொடிக்கம்பம். காற்றினால் இதயம் பறந்து கொண்டிருந்தது.

குவிந்த உள்ளங்கை போன்றே இருந்தது அந்த ஏரி. கிணற்றில் நீரை சேந்துவது போல் வானம் நீரை திருடிக் கொண்டிருந்தது. உள்ளங்கை சரிவு போல உள்ள அதன் பள்ளத்தாக்கில் காப்பிச் செடிகள். காபிச் செடிகளுக்கு நடுவே ஆழகிய ஏரி அமர்ந்திருந்தது. மோட்சம் கிடைத்தால், நீர் கூட ஆவியாகித்தான் வானுலகம் செல்ல வேண்டும் போல. மோட்சம் கிடைத்த நீர், காபிச் செடியில் அப்போது தான் வெளிவந்த இளந்தளிரை தடவிச் சென்றது. இளந்தளிர் மேல் சிறு துளி கண்ணீர்.
நீண்ட புல்வெளியில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருந்தேன். எனக்கு முன்னே புகைபிடித்துக் கொண்டிருந்த காபி வைக்கப்பட்டிருந்தது. ஒற்றை மரம் வானத்திலிருந்து விழும் பனித்துளிகளை தடுத்தது. காபியை லேசாக வாயுக்குள் செலுத்தினேன். இயற்கைய்யும், காபியையும் ஒரு சேர ரசித்தேன். என்ன ஒரு வித்தியாசமான் காபிக் கடை? மனம் ஆச்சரியப்பட்டது.
பூக்களை ரசிக்க இடதுபுறம் திரும்பினேன், சானு நின்றுகொண்டிருந்தால் மிக அருகில். பூ நடந்து வந்ததா? இல்லை பறந்து வந்ததா? வியப்பில் எழுந்தேன். நீல நிற பேண்ட், அதே நிறத்தில் கோடு போட்ட வெள்ளைச் சட்டை. ஏதோ சீருடை போல் இருந்தது அவளது உடை. சிரித்தேன். எந்த உணர்ச்சியும் அவளுக்கு பதிலுக்கு தரவில்லை. உணர்ச்சி அற்ற அல்லது மறந்த முகமாய் இருந்தது, காற்று மட்டும் இடைவிடாமல் காதுக்குள்ளே பேசிக்கொண்டே இருந்தது.
சட்டென அவளது கை பின்புறமாய் ஓடியது. அடுத்த நொடி இரண்டு கூரான கத்திகளை எடுத்து அவள் மார்புக்கு இடையே வைத்தால், அவளது செயல்பாடு ஏதோ இயந்திர மனுசி போல. உணர்ச்சி மிகுந்த ஆண் உண்ர்ச்சியே இல்லாத இயந்திர பெண் முன்னே நிற்பது போல் இருந்தது அந்த கணம். அதுவரை மேகத்தால் வடிகட்டப்பட்ட சூரிய கதிர், சட்டென மாறியது. பிறை வடிவ சந்திரனை ஒத்திருந்தது அந்த கத்திகளின் கூர்முனை. சூரிய ஒளியில் சந்திரன் பிரகாசிக்கிறான். கண்கள் கூசிற்று.
கத்தி என் உடலை பதம் பார்த்தது. கத்தியின் கைபிடியில் இன்னும் அழுத்தத்தை கொடுத்துக்கொண்டிருந்தால் சானு. அன்னிச்சை செயல் கூட அன்று செயல்படவில்லை. அந்த கூரான கத்தி என் இதயத்தை வெளியே இழுத்தது. கத்திக்கு நடுவே இதயம் நடுங்கிக்கொண்டே இருந்தது. வலது கையில் லாவகமாக கைப்பற்றினால் பின்பு திரும்பி நடக்கத் தொடங்கினால். அன்னிச்சை செயல் இன்னும் எதனாலோ நிறுத்தி வைக்கப்பட்டிருந்த்து. சற்று நேரம் பிரமை பிடித்திருந்தது போல நின்றிருந்தேன். அவள் கொஞ்ச தூரம் நடந்து போயிருந்தால். சானு.. கத்தினேன். நடப்பதிலே குறியாக இருந்தால். ஓடத்தொடங்கினேன்.
ஏன் என்னுடைய இதயத்தை பறித்துக்கொண்டு போகிறாய்? சானுவிடம் வினவினேன்.

என்னைப் பற்றி நினைத்தாய் அதான் என்று திரும்பாமலே பதில் சொல்லிக்கொண்டு போனால்.
அந்தக் கொடிக் கம்பத்தின் அருகே நின்றேன். இன்னும் கொடிக்கம்பத்தில் இதயம் பறந்து கொண்டிருந்தது.
நான் உன்னைப் பற்றியேல்லாம் நினைக்கவே இல்லை கத்திக்கொண்டே பின்னால் ஓடினேன்.
நீ பொய் சொல்கிறாய் சட்டென வந்தது அவள் இயந்தரத்தனமான வார்த்தை.
அவள் நடப்பதை நிறுத்துவது போல் தெரியவில்லை.
இல்லை தீர்க்கமாக பதில் தந்தேன்.
என்ன ஆச்சரியம்? நடப்பதை நிறுத்திக் கொண்டால், திரும்பி பார்த்தால்.
இந்தா வைத்திக்கொள். தூக்கிப் போட்டால் இதயத்தை. ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல மீண்டும் நடக்கத்தொடங்கினால்.
அவள் முகம் மனதை விட்டு போக மறுத்தது. அழகே! உருகியது கைகளில் இருந்த இதயம்.
சட்டென இதயம் அவளை நோக்கி பறக்கவும், என்னைப் நோக்கி அவள் திரும்பவும் சரியாக இருந்தது. அவளது இடதுபுறம் ஒட்டிக்கொண்டது.

ஏசி போட்ட காருக்குள் விழித்துக்கொண்டேன். தெருவோரம் வயதான கிழவர் பசியால் யாசகம் கேட்டார். மெதுவாக என் கார் அவரைக் கடந்துபோனது. ஜன்னலை திறக்கக்கூட தோணவில்லை. காரின் பின் ஜன்னல் ஊடாக திரும்பிப் பார்த்தேன். நிறையப் பேர் அவர்களைக் கடந்து வந்தனர். ஓ! என்னைப் போலவே இதயம் இல்லாதவர்களோ இவர்கள்?

பிழை திருத்தம்

பேருந்து திணறியது, கியர் மாற்ற கூட இடம் இல்லை. ஆனால் சூரியன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு தன் சுடுகதிரை கூட்டதிற்க்கு நடுவே செலுத்தினான். கதிர் மட்டுமே நுழைய முடிந்த இடை வெளியில் கண்டக்டர் நுழைந்து வருவது ஏதோ மந்திரம் காட்டுவது போல இருந்தது. அவர் தொடர்ந்து மந்திரங்களை காட்டிக்கொண்டிருந்தார், எல்லோர் கையிலும் டிக்கெட். சாதி, மதங்களை மறந்து கூட்டம் சுயநலத்தால் பிணைந்திருந்தது.
 முகத்தில் அப்படியொரு களைப்பு. பிள்ளைகளை சோறுட்டி, சீராட்டி பின் பள்ளிக்கு அனுப்பி விட்டு, தன் கணவனுக்கு வேண்டிய பணிவிடைகளை முடித்துவிட்டு, தனியாக அவதிப்படும் நோயளி அம்மாவுக்கு ஓடிப்போய் தன் தாய் வீட்டுக் கடமையை ஆற்றிவிட்டு, தன் இடுப்பை மறைக்கும் சேலையை இழுத்துவிட மறந்துவிட்டு, ஆபிஸ் கவலையில் முழ்கிப்போனால் அந்தப் பெண். ஆனால் அவனுக்கோ அது காமமுரும் இடமாய் மாறியது. ஒருவேளை அவன் அவளுடைய முகத்தைப் பார்த்திருந்தால் அந்த விதமாய் செய்திட தோன்றியிருக்காது.
 முதலில் ஏதோ தெரியாமல் தான்படுகிறது என்று கவனக்குறைவாக விட்டுவிட்டாள். நேரமாக ஆக அந்த கை தவறுகளை தொடர்ந்தது. சட்டென புரியாமல், கொஞ்ச கொஞ்சமாய் தான் புரிய துவங்கியது அவளுக்கு. அந்த கால இடைவெளி அவனுக்கு சாதகமாய் தோன்றிற்று. மூளைக்கு இதைப் புரிந்தவுடன் சட்டென கைகளை தட்டிவிட்டாள். அனுமதிக்கிறாள் என்றேனியவன் உணர்ந்து கொண்டான் ஆமொதிக்கிறாள் என்று. சில நொடிகள் களிந்த பின் மீண்டும் அதே தவறைத் தொடர்ந்தான். அவளுக்கு கவலைகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடுவிட்டது மேலும் இது பெறும் துயராய் அமைந்தது.
மீண்டும் அவள் தட்டிவிட, அவன் அதை பெரிதாய் எடுத்துக்கொள்ளவில்லை. எப்படியும் இவள் ஊமை தான், நமக்கு ஒன்றும் பெரிதாக ஆகாது என்று எண்ணிக் கொண்டு தன் தவறை அறங்கேற்றினான்.  கைகளால் சண்டையிட்டு வெற்றி கொள்ள முடியவில்லை. தோல்வியின் அடையாளமாய் அவள் கண்கள் பனித்தன. கண்டக்டர் சீட்டு கேட்டுக் கொண்டிருந்தார். சூரியன் இன்னும் ஏணோ பொதுவாய் எல்லோரயும் சுட்டுக் கொண்டிருந்தது, பக்கத்தில் நின்றவர் தன் மகன் வெளி நாட்டில் வேலை பார்ப்பதை பெறுமையாக பேசிக் கொண்டிருந்தார். யாரும் இவள் கஷ்டத்தை கவனித்ததாய் தெரியவில்லை.
 அம்மா இதோ பாரு ரொம்ப நோரமாய் அந்த அத்தை ஆழறாங்க, பக்கதுல இருக்கற மாமா, அத்தையை இடுச்சுக்கிட்டே இருக்காங்க என்றான் பதின்மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன்.
அதுவரை கவனிக்காத கூட்டம், கோபமாய் அவன் பக்கம் திரும்பியது. அதுவரை பெண்களுக்கே தெரியாமல் உரசிக் கொண்டிருந்த மனிதகழிவுகள், அவனை நோக்கி கூட்டத்தொடு சேர்ந்து கோப பார்வையை உமிழ்ந்தது. அவள் வேர்வையோடு சேர்ந்து, கண்ணீரும் சிந்தியனாள். படபடப்பானாள், கண்ணீர் வரத்து அதிகரித்தது. கூட்டதின் கோபமும் அதிகமானது.
பொம்பளை இப்படி அவுத்து போட்டா, ஆம்பளை என்ன பண்ணுவான் என மனதுக்குள் சிலர் அவனுக்கு வக்காளத்து வாங்கினார். ஆனால் அந்த சிலரின் துணைவியார் இந்த பேருந்தில் பயணம் செய்யவில்லை. அவனை அடிக்கலாமா வேண்டாமா? என கூட்டம் யோசித்துக் கொண்டிருந்த வேளை சட்டென கன்னத்தில் அறை விழும் சத்தம் கேட்டு அனைவரும் தலையை திருப்பினர்.
அம்மா சிறுவனின் கன்னத்தில் இன்னும் சில அறைகளை தந்து விட்டு, அவனைப் பார்த்துக் கேட்டாள், “ இவ்வளவு நேரம் அத்தை அழுகறத பார்த்துட்டு ஏன் சும்மா நின்ன?, வாய திறந்து சொன்னா என்ன முத்தா உதிர்ந்திடும்?”.
ஏம்மா சின்னப் பையனப் பொட்டு அடிச்சா அவன் என்ன பன்னுவான் என்றார் அங்கே நின்ற ஆசாமி ஒருவர்.
கடுங்கோபத்தில் அம்மா அவரை முறைக்க கூட்டம் வாய் அடைத்து போனது. கையில் வைத்திருந்த இரண்டு வயது மகனைப் பார்த்தேன். அந்த அம்மாவையும், அவனையும் பார்த்தேன். என் மகனை மிக கன்னியமானவனாக வளர்க்க வேண்டுமென அப்போதுதான் தோன்றிற்று.

 பேருந்து அமைதியாக காவல் நிலையம் நோக்கிச் சென்றது. யாரும் அவனை அடிக்கவில்லை மாறாக ஆண்கள் காமத்தை விட்டு எப்போதும் போல பக்கத்தில் நின்றனர்.   

Wednesday, October 21, 2015

உதிராத வெள்ளை பூ

மேக அணையை யாரோ முன் அறிவிப்பு இன்றி திறந்துவிட்டது போல இருந்தது நேற்று பெய்த மழை. தண்ணீரே பாத்திராத எங்கள் கிராமத்தில், கங்கையும், காவிரியும் கரைபுரண்டோடியது. நிரைமாத கர்ப்பினி, எப்பொது வேண்டுமானாலும் தன் பிள்ளையை பூமியில் செனிக்க வைக்க தாயாராய் இருந்தது வானம். உள்ளங்கையில் மஞ்சள் வண்ணத்தை பூசி திறந்து வைத்தாற்போல கள்ளிச் செடிகளின் பூக்கள் மலர்ந்திருந்தது. நீரோடியதால் நிலம் இரண்டாக பிளந்து வடுவாய் மாறியது. மனம் வடுவில் மாட்டிக்கொண்டு தவித்தது. என் கால்கள் மெதுவாக தலைவாசலை நோக்கி நடைபோட்டன.

சாமி எப்ப வந்தீங்க? என்ற கேள்வி நடை பயணத்துக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தது.
நான் பதில் எதுவும் கூறாததால், காது கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டாள் போல.
தன் முன்னிற பல் வரிசையைக் காட்டிக் கொண்டு, மீண்டும் அதே கேள்வியை கேட்டாள் எண்பது வயது மதிக்கத்தக்க நாசுவன் சாதியை சார்ந்த குப்பா.
ம்.. இன்னக்கு தா காலைல வந்த குப்பா என்றேன், இருபத்தைந்தை வயதை  தாண்டாத கவுண்டன் சாதியை சார்ந்த நான்.
குப்பா நல்ல கருப்பு நிறம். தன் கனமான உடலை வெள்ளைச் சேலையைக் கொண்டு மூடியிருந்தாள். கைகளின் அனேக இடங்களில் விதவிதமாய்ப் பச்சை குத்தியிந்தாள். ஜாக்கெட் காலச்சாரத்திற்க்கு முந்தியே பிறந்ததாலோ என்னவோ, அவள் அணிந்து பார்த்ததே இல்லை.
ஊரின் சுபகாரியங்கள், காரியங்கள் எல்லாம் குப்பா இல்லாமல் நடக்கவே நடக்காது. சமையலில் தொடங்கி, எச்சை இலையை தூக்கி போடும் வரை மாறி மாறி ஓடியோடி உழைப்பாள். வீசேச வீட்டுக்காரங்களே போதும் போதும் என்று சொல்லுமளவு வேலை செய்வாள். கொடி அசைக்காமல் துவக்கி வைப்பாள், சத்தமில்லாமல் முடித்தும் வைப்பாள்.
ஆச்சுங்க சாமி என்று குப்பா நின்றாள். எல்லா வேலையும் முடிந்துவிட்டது. சம்பளத்தைக் கொடு என்று அர்த்தம். இவ்வளவு தான் சம்பளம் என்றேல்லாம் கிடையாது. சிலர் நாற்பது ரூபாய் தருவார்கள், சிலர் ஐம்பதும், நூறும் அவர் அவர் வசதிக்கெற்றவாறு தருவார்கள். பேரமே பேசாமல் வாங்கிக்கொண்டு போவாள். ஆனால் விஷேச நாட்களில் அவள் வீட்டில் அடுப்பெரியாது. மூன்று வேளை சாப்பாடுக்கும் அவர்கள் தான் பொறுப்பு. வெட்டியாய் ஊருக்குள் சுற்றிக்கொண்டிருப்பான் சிலோன். குப்பாவின் ஒரே மகன்.
சாப்பாடு போட இவ்வளவு நேரமா? வந்ததும் வாராததுமாய் ஓய்ந்துபோய் வரும் குப்பாவை பார்த்துக் கத்துவான்.
ஏன்டா விஷேச வீட்டுனா முன்னப்பின்னதா ஆகும். இந்த எசமானுக்காக அவங்க நேரமே ஒலையை கொட்டி அனுப்பி வைப்பாங்காலா? என்றாள் குப்பா.
“ஏய் சோத்த போடு. சும்மா பேசாத”, உரத்த குரலில் எச்சரித்தான்.
சும்மா கத்தாதடா.. சாமி மாடு மாதிரி ஊரைச் சுத்தி சுத்தி வர்ரையே, வந்து கூடமாட ஒத்தாசை செஞ்ச என்ன குறைஞ்சா போயிடுவ? பண்ணாடிகிட்டச் சொன்னா எதுவும் சம்பளம் போட்டுக்கீட்டுத் தருவாறு. என்றாள் சற்றே ஏக்கதுடன்.
அவ்வளவுதான். சிலோன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான். வேலைக்கே செல்லாமல் வளர்த்த உடம்பு. கட்டி கட்டியாக உடம்பெங்கும் நிறைந்திருக்கும். கரடுமுரடான முகமும், குரலுமாய் இருந்தான்.
சட்டென அவள் கன்னத்தில் அறைந்துவிட்டான். என்ன எகத்தாளம் உனக்கு சாப்பாடு போடுனா?
ஐய்யோ அம்மா அடிச்சுப் போட்டானே இந்த சண்டாளப் பாவி. என்னக் கொன்னு போட்டுடு. அப்பத்தான உன் கோவம் அடங்கும். நா இருக்கறதுதான உனக்கு இடஞ்சலா இருக்கு, உறக்க கத்தினாள். சில நேரங்களில் யாராவது வந்து சமாதனம் செஞ்சு வைப்பார்கள்.
விஷேசம் இல்லாத காலங்களில், தோட்ட வேலைக்குப் போவாள். சில சமயம் யாராவது வயதானவர்களை பாத்துக்கொள்ள வேண்டி வேலை வரும். அது இது என்று பார்க்கமாண்டாள், எந்த வேலையானாலும் செய்வாள். ஊருக்கு வெளியே டாஸ்மார்க்கின் முதல் வாடிக்கையாள் சிலோன் தான். அதிகாலை ஆறு மணிக்கே ஊற்றிக்கொள்வான். போதை லேசா தெளிஞ்சா போதும், குப்பாகிட்ட காசுக்கு வந்து நிப்பான்.
டேய் பணமென்ன மரத்துலயா காய்க்குது? போடா என்று கத்தி அனுப்ப முயல்வாள்.
அது போதுமே குப்பாவை அடிக்க. எப்படியும் காசை வாங்கிக்கொண்டு போய்விடுவான். குடித்துவிட்டு வந்து மறுபடியும் அடிப்பான்.
ஏன்டீ காசு கேட்டா. உடனே தரமான்டயா? ம் சொல்லுடீ. கண்டபடி பெத்த அம்மா என்று கூட பாக்காமல் திட்டுவான். சில நேரங்களில் எட்டிக் கூட உதைப்பான். அப்படி உதைக்கும் போது, ஒருநாள் படாத இடத்தில் பட்டு குப்பா சுருண்டு படுத்துக்கொண்டாள்.
ஐஞ்சு வேளவு பண்ணைக்காரச்சி வீட்டில் அன்னைக்கு விஷேசம். என்னடா இது குப்பாவை இன்னும் காணோமே என்று வீட்டுக்கு வந்து பாத்திருக்காங்க. குப்பா வாசல்லையே படுத்துக்கிடக்கிறா, வாயில இரத்தம். சிலோன் போதை தெளியாம தின்னை மேல கிடந்ததை பார்த்து அவங்க கத்துன கத்துல ஊர் சனமெல்லாம் கூடிப் போச்சு.
அஸ்பத்திரில குப்பாவை கொண்டு போய் சேர்க்க வெங்கடேஸ் காரை ரெடி பன்னின கையோட, பெரிய பண்ணாடி பஞ்சாயத்தைக் கூட்ட ஏற்ப்பாடு பண்ணிவிட்டார்.
தலைவாசலில் உள்ள வேப்பமரத்தடியில் பஞ்சாயத்து தொடங்கியது. சொல்லுடா! பெத்த தாயை யாரவது கை நீட்டி அடிப்பாளா? கனத்த கோபத்துடன் பெரிய பண்ணாடி கேட்டார்.
ஊமையாகவே நின்றிருந்தான். இன்று மட்டும் தான் குடிக்காமல் இருக்கிறான். அவன் கை, காலை பார்த்தாலே தெரிகிறது.
இரண்டு போட்டதா பேசுவா சாமி இவ, என்று சொல்லி நாக்கை கடித்துக்கொண்டு கூட்டதிலிருந்து பொன்னான் நாசுவன் சிலோனை நோக்கி ஓடிவந்தான்.
“இருப்பா”, என்று தரியகார பண்ணாடி அவனை நிறுத்திவிட்டார்.
கிராம மக்கள் அனைவரும், ஒருத்தர் பாக்கியில்லாமல் வந்திருந்தனர். எனக்கு தெரிந்து நடக்கும் பெரிய பஞ்சாயத்து இதுதான். சிலோன் மேல் வந்திருந்த கூட்டம் கடும் கோபத்திலிருந்தது.
காலங்கத்தால தண்ணீ போட்டுக்கிட்டு ரோட்டுல படுத்துக்கிடக்கிற, அப்புறம் அவளை போய் அடிக்கிற. பாவம்டா அவ. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்குதாட? அவ இப்ப செத்துகித்து போன என்னடா பன்னுவ? மறுபடியும் கேட்டார் பெரிய பண்ணாடி.
சாமீ குத்தம்தானுங்க! என்றான் தலையை கீழ போட்டவாறு.
என்னடா பன்னறத பன்னிட்டு.. குத்தமா குத்தம்.. கத்தினான் பொன்னான். மேடையிலிருந்து கையை ஆட்டியதைக் கண்டதும், பேசுவதை நிறுத்திக்கொண்டான்.
அவ என்ன பன்னுவான்? எல்லாம் அந்த தண்ணீ உள்ள போனதும் பன்ற வேலை என்று சிலோனுக்கு அதரவாய் பேசினார் கத்திரிக்காம்பாளையப் பண்ணாடி. அதுக்கு எதுதவாது வழி பன்னுங்க. ஊர்ல பல பேர் நாசமா போறது இதனால தா என்றார் மீண்டும்.
இப்படிச் சொன்னதும், ஊரின் பல இளவட்டங்களின் கோபத்துக்கு ஆளானார். குறிப்பாக அவரது மகன் பாலகுமார். இவருக்கு வேற வேலையே கிடையாது சும்மா, என்று முனுமுனுத்தான்.
ஆமாங்க சாமி அவர் சொல்றது சரிதாங்க என்று வழிமொழிந்தான் பொன்னான்.
இராமசாமி நாடார் பெரிய பண்ணாடி காதில் ஏதோ ஓதினான்.
தண்ணீ அடிக்க மாண்டனு பஞ்சாயத்துல சத்தியம் பன்னிட்டு போ. அதை மீறின அந்த அம்மன் உன்ன சும்மாவிடாது பாத்துக்க என்றார்.
ஒருவழியாய் அம்மன் முன்னே சத்தியம் பன்னினான். பஞ்சாயத்தில் அவனுக்கு பல பேர் அறிவுரை சொல்லி ஒருவர் பின் ஒருவராய் கலைந்தனர்.
கொஞ்ச நாள் சத்தியத்தை கடைபிடிததான். பிறகு பழைய குருடி, கதவ திறடிங்கிற மாதிரி தா நடக்க ஆரம்பித்தது.
பண்ணைக்காராச்சி! பண்ணைக்காராச்சி என்று கத்திக்கொண்டே எங்கள் வீட்டுக்கு ஓடிவந்தாள் குப்பா. லேசாக மேல்மூச்சு வாங்கினாள்.
அந்த போஸ்ட்மேன் வந்தானா? இந்த மாசம் பணம் வல்லையே என்றாள் சற்று வருத்தத்துடன்.
இன்னும் வல்லைடீ, பதில் தந்தாள் என் பாட்டி.
பாத்தீங்களா. சண்டாள உங்களுக்கு கொடுத்துட்டு, எனக்கு கொடுக்காம போயிருக்கான். வசைபாடினாள்.
வல்லைடீ, இந்த செவிடுக்கு காது கேட்க்காது வேற கத்தினாள் பாட்டி.
ஆஸ்பத்திரியிலிருந்து வந்த பிறகு காது சரியாக கேட்க்கவில்லை அவளுக்கு பாவம்.
ம்க்கும் அடித்தொண்டையை செறுமினாள். அப்ப இரண்டு பேருக்குமே பண்ம் தராம ஏமாத்தறானா?
அடி! சர்கார் பணம் போட்டத்தான வரும். மாசம் உன்னோம் முடியலடீ என்று குப்பாவுக்கு கேட்கும் சத்ததில் பேசினாள்.
இரண்டு, மூனு நாள் இருக்கும். மறுபடியும் பண்ணைக்காராச்சி! என்று கத்திக்கொண்டே வந்தாள். நா சொல்லுல பணம் வந்திருச்சு பாருங்க! என்று இரு நூறுபாயைக் காட்டினாள். அவ ஏமாத்தறானா? கோபம் கொப்பளிக்க கேட்டாள்.
சரி சரி போ என்பதைப் போல சைகை காட்டினாள் பாட்டி.  
கொஞ்ச நேரத்தில் வந்த தாபால்காரார், இந்த குப்பா தொல்லை தாங்க முடில. மாச முடிறதுக்குள்ள பணம் பண்ம்கிற. வந்தா தான தற. போற இடமெல்லாம் வற்றா. ரொம்ப வருத்தப்பட்டு பேசிவிட்டுப் போனார்.
யாரோ சொன்னாங்கனு சிலோனுக்கு கல்யாண ஏற்ப்பாட்டை ரெடி பண்ணிணா குப்பா திடீருனு.
என்னடினு கேட்டதுக்கு. கல்யாணம் பண்ணிண இவன் திருந்திருவாங்க என வக்காளத்து வாங்கினாள்.
அவள் சொன்னது போல கல்யாணம் என்றதும் ஒழுக்கமாக தண்ணீ அடிக்காமல். ஊரே முக்கின் மேல் விரல் வைக்கும்படி தினமும் வேலைக்குச் சென்றான். எல்லோரும் பரவாலையே, சிலோன் மாறிடான்டோய் என்று பேசிக்கொண்டனர்.
முத முறையா குப்பா வீட்டுல சுபகாரியம். கல்யாணத்துக்கு முத நாளே வந்து, எல்லா பண்ணாடியும் உதவவேனும். வீட்டுல விஷேசம் வச்சுருக்கன் என்று வேண்டுகோள் வைத்தாள். அவள் விருப்பப்படி தடபுடலாய் நடந்து முடிந்தது.
சிலோன் ரொம்ப நல்லவானாய் சில நாள் நடித்தான். வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிக்கொண்டது. இதுநாள் வரை குப்பாவை மட்டும் தான் அடித்துக் கொண்டிருந்தவனுக்கு, அவள் பொண்டாட்டியும் கிடைத்துவிட்டாள். உண்மையில் கல்யாணத்துக்கு அப்புறம் குப்பா அடிவாங்குவது சற்று குறைந்துவிட்டது.
நா ஏன் வேலைக்கு போகனும்? கல்லு மாறி புருசன் இருக்கும் போது என்று சிலோன் பொண்டாட்டி சொல்லிவிட்டாள்.
இப்போது குப்பா தலையில் வந்துவிடிந்தது. மூன்று பேறுக்கும் சேர்த்து சம்பாதிக்கும் நிலை. காலையில் எழுந்ததும் வயதானவங்களை பார்த்துக்கொள்வது, பாத்திரம் கழுவுவது, பிறகு எல்லோருடனும் சேர்ந்து தோட்ட வேலைக்கு ஓடுவாள், வந்ததும் வாராததுமாய் திரும்பவும் பாத்திர கழுவ போய்விடுவாள்.
சிலோன் பொண்டாட்டி மாசமானதால், அவள் அம்மா வந்து அழைத்துக்கொண்டு போய்விட்டாள். குழந்தை பிறந்து ஒருவருடம் ஆகியும் சிலோன் போய் பாக்கவில்லை.அவளும் திரும்பி வரவில்லை. குப்பா எவ்வளவோ முயன்று பார்த்தாள். பிரிந்தது பிரிந்ததாகவே போனது.
வழக்கமாக தோட்ட வேலைக்கு எல்லோரும் கிளம்பும் போது, பொன்னான் பொண்டாட்டி மட்டும் கத்திக்கொண்டு ஓடிவந்தாள். அத்த! சிலோன் மச்சா நம்ம விட்டுட்டு போய்டாறு. ஐய்யோ! என்று இனக்குரலில் மீண்டும் கத்தினாள். கையிலிருந்த சாப்பாட்டு தூக்குச் சட்டியை அப்படியே கீழே போட்டுவிட்டு குப்பா தலைவாசலுக்கு ஓடினாள்.
இரத்த வெள்ளத்தில் செத்துக்கிடந்தான் சிலோன். ஓடிவந்தவள் அப்படியே அவனை தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டு கத்தினாள். அவள் வெள்ளை நிற புடவை சிவப்பு நிறமாய் மாறியது.
குப்பா வீட்டிலும் காரியம் நடந்தது முதல் முறை. சிலோன் பொண்டாட்டி தன் குழந்தையை கூட்டிக்கொண்டு வந்ததும், குப்பாவை கட்டிக் கொண்டு ஒப்பாரி வைத்தாள். ஒரு வருட குழந்தைக்கு என்ன தெரியும்? சிரித்தது. ஒருவழியாய் சிலோனை அடக்கம் செய்தனர். குப்பா காரியம் முடியும் வரையிலும் சித்த பிரமை பிடித்தவள் போல இருந்தாள். முதல் முறை அவள் வேலை ஏதுவும் செய்யாமல் ஊருக்குள் நடந்த காரியம் இதுவே.
சிலோன் எப்படி செத்தான் என்று நேரில் பார்த்த ஒருவர் பக்கத்து ஊர்க்காரருக்கு விளக்கினார். அவ எப்பவும் போல தண்ணீயப் போட்டுட்டு ரோட்டுல வந்துருக்கா.. இவனுக்கு தா தண்ணீ போட்ட கண்ணு மண்ணு தெரியாதே!. லாரிக்கார வந்து ஒரே இடி. ஆள் ஸ்ப்பாட் ஆவுட். ஆத்தாக்காரி வந்து கத்துனா.முடிஞ்சு போச்சு என்று முடித்தார்.
ஆமா. அம்மனை ஏமாத்துனா? அம்மன் சும்மா விட்டுடுமா? சத்தியம் பண்ணி ஏமாத்துனான் அதான் இப்படி ஆகிடிச்சு என்றார் தரியகாரப் பண்ணாடி.
ஆமாங்க உங்க ஊர் அம்மன் சக்தி உள்ள தெய்வம் தாங்கோ என்றவாறு பக்கத்து ஊர்க்காரர் நகர்ந்தார்.
ஒரு வருட பேரனைத் தூக்கிக்கொண்டு மறுபடியும் ஓடி ஓடி உழைக்க தொடங்கினால். தன் மருமகளின் நிலை இவளுக்கு ஒன்றுன் புதிது இல்லை.
இதோ! சின்ன சிலோன் என்று ஊராரல் அழைக்கப்படும் குப்பா பேரன், அவள் மடியில் உட்காந்துகொண்டு அழுகிறான்.
இங்க பாரு! நீ வளர்ந்து பெரிய பையனானதும் நம்ம மாப்பிளைக்கவுண்டர் மாதிரி வரனும். அதுக்கு நீ ஒழுங்கா படிக்கனும் என்று புரியாத அவனுக்கு என்னைக் காட்டி சொல்லிக்கொண்டிருந்தாள்.
ஏங் குப்பா உனக்கு கஷ்டமா இல்லையா? என்றேன். சிலோனை இழந்த பிறகு இப்போதுதான் பார்க்கிறேன்.
அட என்ன சாமி மனுச வாழ்க்கை? அவன் கூப்பிட்டா போய்ட வேண்டியதுதான. அதுவரைக்கும் நம்மளால முடிஞ்சமட்டும் உழைக்கலாம் சாமி. நீங்க வேலையாய் கிளம்பிறிங்க போல நா வந்து நந்தி மாதிரி நிக்கிறன். நீங்க போங்க சாமி என்று சொல்லிவிட்டு, தன் பேரனை சுமந்துகொண்டு வேகமாக நடக்கத்தொடங்கினாள்.      
அதுவரை வடுவில் சிக்கியிருந்த மனம் வெளிவந்து தன்னம்பிக்கை பெற்றது.

   

முத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி


இது 1000வது தடவை. . நான் அவளை காதலிக்கிறேன் என்று சொல்வது. அலட்சியமான ஒரு
பார்வை, இன்னும் எத்தனை முறை தான் சொல்வது என்பது போல உதடுகள். அவளது முகமலர் இடதுபுறம் எங்கொ பார்த்துக் கொண்டிருந்தது. காபி கப் வைக்கப்பட்ட சத்தம் கேட்டுத்தான், காபி சாப்பில் இருக்கிறோம் என்ற நினைவே வந்தது.

காபி கப்பிலிருந்து ஆவி மெல்ல மேலே பறந்து, பின் ஒன்றையொன்று கட்டித் தழுவிக் கொண்டது. சுற்றுமுற்றும் பார்த்தேன். யாரும் எதையும் கவனிப்பதாய் தெரியவில்லை. இன்னும் அவைகள் தழுவிக் கொண்டுதான் இருந்தன.

காபி, புகை பிடித்துக் கொண்டிருந்தது.ஆணி அடித்த பலகையில் "புகை தடை செய்யப்பட்ட பகுதி" என்று எழுதியிருந்ததுஅவரவர் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.

சிகை திரைச்சீலை போல, என் கண்களுக்கும் அவள் முகத்துக் இடையே விழுகிறது அடிக்கொருதரம். உணர்ச்சியை மறைத்துக் கொள்ளு(ல்லு)ம் புதிய முறையா? கைகள் வைப்பரைப் போல அடிக்கடி துடைத்துக் கொண்டே இருந்தது. அந்த மிருதுவான விரல்களை தொட வேண்டும் என எழுந்த ஆவலை அவளது விழிச்சுடரில் சுட்டு சூன்மாக்கினேன்.பேசுவாள் என எதிர்பார்ப்பது பேராசை. கடந்த கால வரலாறும் இதைதான் கூறிற்று. சுற்றி ஒரு முறை பார்த்தேன்.

சானு காபி என்று பெயர் சொற்க்களை மட்டும் தான் உச்சரித்தேன், வினைச் சொற்களைச் சொல்லி இன்னும் வினையைக் கட்டிக் கொள்ளும் முன்பே எழுந்து கொண்டாள். ஒருவேளை  பிடிக்கவில்லை போலும் காபியை. எனக்கு பிடித்திருந்தது. குடித்துக் கொண்டிருந்தேன், அவள் நடந்து கொண்டிருந்தால்.

கொஞ்ச தூரம் சென்றதும், திரும்பி என்னைப் பார்த்தால். சட்டென காபி கப்பை டேபிளில் வைத்தேன், அவள் பார்வை மற்றோருமுறை சுட்டுவிட்டது. காபி கூட பயந்து கப்பிலிருந்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது,என்னைச் சுட்டது. சட்டை மேல் விழுந்த காபி துளிகளை கையால் துடைக்க நேரமின்றி எழுந்து ஓடினேன். அவளைப் பற்றி புரிந்ததெல்லாம் புரியவில்லை, புரியாததெல்லாம் புரிந்து கொண்டேன். புரிந்ததும், புரியாததும் அடிக்கடி தனக்குள் குழப்பிக்கொள்ளும்.

அவளை நெருங்கவும், என்னை நேர்ரேதிர் பார்த்து அவள் நிற்கவும் மிகச் சரியாக இருந்தது. நிர்வாண உதடுகள் இடைக் கால நிவாரனம் தேடியது. வழங்கப்பட்டது நிவாரனம். ஆணி அடித்த பலகை தொம்மென விழுந்த சத்தால், நிவாரனம் நிறுத்தப்பட்டது. நான் சுற்றி எல்லோரையும் பார்த்தேன். இப்போது மட்டும் அனைவரும் என்னைப் பார்த்தனர். என் மனைவியை விடுத்து நான் மட்டும் எப்படி காபி குடிக்க, மனதுக்குள் கேட்டேன் எல்லோரையும் பார்த்து.
அவளுக்கு பிடித்திருக்கும் போல என்னையை. நேற்று நடந்த சண்டை முடிவுக்கு வந்தது தற்காலிகமாய். 300வது முறையாக முத்தத்தில் தொடங்கிணோம் எங்கள் ஊடலை.