Skip to main content

மியாவ் மியாவ்

கருப்பணசாமி, சிலை செஞ்சு வச்சுப்போடறன். இந்த சீவன காப்பாத்து என கண்களை மூடி மேற்க்கே பார்த்து வேண்டிக் கொண்டாள் எங்கள் ஆத்தா.
பக்கத்தில் பூனை பக்…பக்….கென்று கக்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்தை யாரோ அழுத்திக் கொண்டது போல அது கக்கியது. அப்போதுதான் நான் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருந்தேன். பூனை கத்தற சத்தமும், ஆத்தா சாமி கும்பிடற சத்தத்தையும் கேட்டு பொடக்காளிக்கு வந்தேன்.
கண்களை திறந்த ஆத்தா கையிலிருந்த திருநீரை வீசி பூனையின் மேல் எறிந்தாள், பிறகு அதன் நெற்றியில் பூசிவிடப் போனதும் அது பயந்து ஓடிப்போனது.

சும்மா இல்லாத, இந்த கெரகம்…….என்று அதை திட்டிக்கொண்டு என்னை பார்த்தவாறு ஆசாரத்திற்க்கு நகர்ந்தாள். எனக்கும் ஆத்தாவிற்க்கும் முந்தானேத்து பயங்கர சண்டை அதனால் பேச மாண்டாள். நான் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்துவிட்டு ஏதோ பூனைக்கு உடம்பு சரியில்லைனு நினைத்துக்கொண்டேன்.

இரா தூங்கும்போது மூங்கில் விட்டத்துக்கும், முகட்டு ஓடுக்கும் நடுவுல இருக்கிற இடைவெளியில மெதுவாக தன்னோட கால எடுத்து வச்சு நகரும். ஆத்தா அங்க பாரு பூனை கத்துது. டேய்… சும்மா கிடக்கமாண்ட. அது கத்துனா கத்துது உனக்கென்ன? என மிரட்டி என்னை தூங்க வைப்பாள், காலையில் எழுந்து பார்த்தால் முகட்டு ஓட்டின் மேலே நின்று கொண்டு, ஸ்கூலில் பீ.டி மாஸ்டர் சொல்லிக் கொடுக்கும் டிரில் எல்லாம் பண்ணிக் கொண்டிருக்கும். இதைப் பார்த்ததும் எனக்கு அதைப் போலவே ஆக வேண்டும் என்று தோன்றியது. பொடக்காளியில் இருக்கிற வேப்பமரம், வீட்டுக்கு முன்னாடி இருக்கிற குட்டிச்சுவர் என அது ஏறாத இடமே இல்லை. எனக்கு அதெல்லாம் ஒரு வித்தையாய் இருந்தது.

நான் ஆசார தின்னையில் உட்க்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் போதே அம்மா புகையிலைக் குடோனிலிருந்து வந்திருந்தாள்.

ஏதோ எடுப்பதற்க்காக வெளியே வந்த ஆத்தா அம்மாவைப் பார்த்து, யேலே ஈஸ்வரி அந்த கெரகம் பக்கத்து வீட்டுல கோழிக்கு வச்சிருந்த விசத்த திண்ணு போடுச்சுலே என்று சொல்லி அழ ஆரம்பித்துவிட்டாள்.

பின்னாடியே வந்த பெரியம்மா ஆத்தா அழுவதைப் பார்த்து, தேமா அழற எனக் கேட்டுக் கொண்டே ஆசாரத்துக்குள் அம்மாவும் அவளும் வந்தார்கள்.
அந்த கிரகம் நாசுவமூட்டுல வச்சிறுந்த விசத்த திண்ணுபோட்டு சாவக்கிடக்குதுலே…. என ஒப்பாரி வைத்தாள். அம்மா அவளின் தோள்பட்டையை கவனமாக பிடித்துக்கொண்டாள். ஆத்தாவுக்கு வெடுவெடுவென வருதுனு சொல்லியாதல் அம்மா அப்படி பிடித்தாள்.

டீ போட்டு யாரும் குடிக்கவே இல்லை. நான் மட்டும் குடித்து டம்ளரை வைக்கும் போதுதான் பார்த்தேன். ஆத்தா சாமான் வைக்க போட்டிருந்த பலகையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அம்மா பெரிய தெருவையே பார்த்திருந்தாள். எனக்கு என்ன செய்வதேன்று தெரியவில்லை.
அட தே இப்படி எல்லா வெசனப்பட்டு உக்காந்துட்டீங்க என்றாள் கலை. அம்மா விசயத்தைச் சொன்னதும், அவள் பெரிதாக கவலைப்படவில்லை. இருந்தாலும் நிலைமையை காரணம் காட்டி வருத்தத்தை வழுக்கட்டாயமாக வர வைத்தாள். பூனை நாங்க பாலயோ, சோறயோ வைக்காம அது திங்காது. வீட்டுல பால் பாத்திரத்தையோ, தயிர் பாத்திரத்தையோ உருட்டாது. என்ன பசினாலும் எங்க அம்மா சோறு வைச்சாதா திங்கும், இல்லைனா காலைச் சுத்துக்கிட்டே கத்திக்கிட்டு கிடக்கும் என பூனையைப் பற்றி சோகமாய் பெருமையடித்தாள் அம்மா. துக்கம் விசாரித்துவிட்டு நகர்ந்தாள் கலை.

இருள் மெல்ல பாம்பைப் போல ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. இதோ அப்பா வந்திருவாறு என நானும் எல்லோரும் நினைத்திருந்தோம். அவரு ஒன்னும் மருத்துவமோ இல்ல அத காப்பாத்தனும்னோ துளியும் கவலைப்படமாண்டார். சொல்லப்போன அந்த கருமத்த அடிச்சு கொல்லனும்னுதா சொல்லுவாறு. எங்க அப்பா ஆத்த மேல வச்சிருந்த கோவத்தையேல்லாம் பூனை மேலதா காட்டுவாறு.

பூனைய கருமம், கருமம்னுதா கூப்பிடுவாறு. ஒருநாள் ஆத்தா நேராவே கேட்டுப் போட்டா, ஏ அத திட்டுற மாதிரி சாட மாடயா என்னைய திட்டறீங்க, நேராவே திட்டறதுனா திட்டிறதுதான. நினைவு தெரிந்து ஆத்தா அப்பாவிடம் பேசும் சில வார்த்தைகளில் இதும் சிலது. அன்றோடு அப்பா பூனையிடம் பேசுவதில்லை.

இரணி நேர ஆகிப் போச்சு, இன்னேரத்துக்கு கால கால சுத்திக்கிட்டு வந்து கத்தும். எங்க போச்சுன்னு தெரியலையே? இருந்தாலும் தொல்லை இல்லைனாலும் கஸ்டமா இருக்குது. பச்…..என சொல்லிக்கொண்டு எழுந்து வீட்டுக்குள் போய்விட்டாள். அம்மா டம்ளரிலிருந்த டீயை அப்படியே பாத்திரத்தில் ஊற்றி சமையல் வீட்டுக்குள் எழுந்து போனாள். நான் தின்னையிலேயே இருந்தேன்.
பூனை கத்துற சத்தம் ரொம்ப பழகிப்போயிருந்தது. ஆத்தா சொன்னத கேட்டதும் அது எப்படி பசியாயிருந்தா கத்தும் என நினைத்துக்கொண்டேன். அடிவயிற்றிலிருந்து வார்த்தையை அழுத்தி உச்ச ஸ்தாயில் மியாவ்…….மியாவ்….. என கத்தும். நான் அதைப் போலவே கத்தியதும், ஆத்தா கட்டலிலிருந்து எழுந்து வரும் சத்தம் கேட்டது. வெளியே வந்து பார்த்து பூனையை காணாமல் போனதும் என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே போனாள்.

அதற்க்குள் விசயம் ஊர் முழுக்க பரவியிருந்தது. துக்கம் விசாரிக்க வேண்டுமென யாரும் வரவில்லை ஆனால் போற வழியில பார்த்தா கேக்க ஆரம்பிச்சிடுவாங்க. அம்மாவும், ஆத்தாவும் வீட்டுக்குள் இருந்ததால் பெரியம்மா எங்கோ போய்விட்டு வந்தவளிடம் கேட்க ஆரம்பித்தார்கள். அவளுக்கு பூனை ஒரு பேடி என்றுதான் நினைப்பு. முன்னாலேல்லாம் யாராவது கேட்டால் அது வேலுச்சாமி ஊட்டு பூனை வந்துச்சுன்னா அப்படியே பயத்துல ஒன்னுக்கு போயிடும். அது வந்து வீட்டுல இருக்கிற பாத்திரத்தை உருட்டிட்டு போகும் இது அப்படியே வேடிக்கை பாக்கும் என்பாள். இன்று அப்படி சொல்ல முடியவில்லை. துக்கம் கொண்டிருந்த வீடு என்பதால் நாசிவன் வீட்டை ஏக வசனத்தில் வசை பாடிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தாள். அப்பாவை இன்னும் காணோம். எனக்கேன்னவோ அப்பா வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை. அவரது சைக்கிள் கடகட வென ஆடிக்கொண்டு வருவது சுப்பிரமணி வீட்டுக்கு வரும்போதே தெரிந்துவிடும். பூனை இப்போது பொடக்காளியில் வந்து கக்கிக் கொண்டிருந்த சத்தம் கேட்டது. ஆத்தாவை கூப்பிடலாம் என்று நினைத்து வேண்டாமேன அம்மாவிடம் கத்தினேன். எனக்கு முன்னாள் எண்பது வயது ஆத்தா ஓடிப்போனாள். வெள்ளையும், சிவப்பும் கலந்த நிறத்தில் கக்கிக்கொண்டே இருமியது. அது இருமுவதைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. என்னுடைய கதாநாயகன் என்முன்னால் சாவதை விரும்பவில்லை, வருத்தமாய் இருந்தது. சிலையேன இருவரும் அந்த இடத்திலேயே நின்னு இருந்தனர். ஆத்தா மறுபடியும் கருப்பணசாமியை வேண்டி திருநீறு போட்டாள். அப்பாவின் சைக்கிள் சத்தம் கேட்டு, ஓடிப்போய் அவர் வீட்டுக்கு வருவதற்க்கு முன்னால் விசயத்தை சொன்னேன். அவர் பெரிதாக எதையும் அலட்டிக் கொள்ளவில்லை.

அப்பா வந்ததும் ஆத்தாவும் அம்மாவும் அங்கிருந்து நகர்ந்தனர். அப்பா, ஆத்தா அழுதிருப்பதைக் கண்டுகொண்டார். பொடக்காளிக்குள் போய்விட்டு சில நொடிகளில் திரும்பி வந்தார்.
லே ஈஸ்வரி பூனை இந்த இராவ தாண்டுச்சு பொளச்சுக்கும் ஆமா என்றார் அப்பா. அது அம்மாவுக்கு சொன்னதா இல்லை ஆத்தாவுக்கு சொன்னதா தெரியாது.

நா அன்று அப்பாவோடு கட்டல் போட்டு வெளியே படுத்துக்கொண்டேன். அம்மாவும் பாயில் எங்களோடு பக்கத்தில் படுத்துக்கொண்டாள். துக்கம் கேட்டு வந்த இரண்டோருவரிடம் அப்பா பேசிக்கொண்டிருந்தார். ஆத்தாவோடு சண்டையிட்டதாலும், மனதளவில் தைரியம் தேவையாலும் அப்பாவின் பக்கத்தில் படுத்துக்கொண்டேன் இல்லை என்றால் ஆத்தாவோடு கயிற்றுக் கட்டிலில்தான் படுக்கை. தென்னை சட்டம் மேல் அடுக்கப்பட்ட ஓடுகள் இன்றி நட்சத்திரத்தையும், நிலவையும் பார்த்து தூங்க கஸ்டப்பட்டேன். அப்பா பேசுவது மெதுவாக எங்கோ போய்க் கொண்டிருந்தது. அப்பொழுது ஆத்தா விம்மி அழும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது.      
   
இது மூணாவது பூனை. முத பூனை இதே மாதிரி விசத்த தின்னு மண்டயப் போட்டிருச்சு, இரண்டாவது எங்க போச்சுன்னே தெரியல. காணாம போச்சு. ஆனா ஒன்னு, இது வந்ததுக்கு அப்புறம் எலித் தொல்லை சுத்தமாவே இல்லை. அது எப்படித்தா பிடிக்கும்னு தெரியாது, இரா புறாமும் அலைஞ்சு பிடிச்சுபோடும் என யாரோவோடு அப்பா பேசியதுதான் நான் கடைசியாய் அரைத்தூக்கத்தில் கேட்டது.
காலையில் பார்த்தால், அம்மா பெரியம்மா கேவிக் கேவி அழுதுகொண்டிருந்தார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்பா எழுப்பி இருந்தார். இன்னும் விடியவில்லை, சூரியன் மேலேழுவது போல தோன்றிற்று. அப்பாவின் முகம் சோகமாக இருந்தது. நான் கண்களை துடைத்துக்கொண்டு வீட்டிற்க்குள் போனால், பூனை நன்றாக நடந்து, என் கால்களுக்கு இடையில் வந்து மேலும் உள்ளே போக முடியாதவாறு தடுத்தது. அதை தாண்டி உள்ளே போனால் கட்டிலில் ஆத்தா வாயிம் நுரைத்தள்ளியபடி கிடந்தாள் பக்கத்தில் இரண்டு அம்மாவும் அழுதிருந்தார்கள். என்னைப் பார்த்த்தும் அம்மா எழுந்துவந்து கட்டிக்கொண்டு அழுதவாறு பாடினாள்.

இரா தாண்டுனா பொளச்சு போடுமுன்னு நினைச்சிறுந்தா
அந்த பூனை கொண்டு வந்து போட்ட பாம்பு கடிச்சு போயிட்டாளே
எ ஆத்தா. அவ என்ன நினைச்சு போனாளோ தெரியல
என்னைய அனாதையா போன்னு சொல்லி போயிட்டா
திரும்பிப் பார்த்தேன். பூனை மியாவை தாழ்ந்த சுருதியில் மியாவ், மியாவ் எனக் கத்தியது.
    

Comments

Popular posts from this blog

யாதும் காமமாகி நின்றாய்

எங்கோ சூரியன் தொலைந்து போய்க்கொண்டிருந்தான். நானும் தான். குவித்து வைத்த உள்ளங்கை போல ஏரியின் கரை கவிழ்ந்து கிடந்தது. அதன் கரையேல்லாம் காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. ஏரியின் நீர், கண்ணின் வெள்ளைப் பாவை போல தோன்றிற்று. முடிவிலா வானம் அந்த கண் வழியே தெரிந்தது. பச்சை நிற கண் இமைகளோ அந்த காப்பிச் செடிகள் என்று தோன்றிற்று. அது மலையின் கண், அதனாலோ என்னவோ இவ்வளவு பெரியதாய் நீண்டு கொண்டு போகிறது. தொலைதூரத்தில் ஆரம்பித்த வழி அந்த ஏரியை சுற்றி நாங்கள் தங்கியிருக்கும் பஞ்சாயத்து போர்ட் ஆபிஸ் கெஸ்ட் கவுஸ்ஸில் முட்டி நின்றது. பச்சை நிற மரங்கள் நிறைந்து கிடக்கும் மேகமலையில் அந்த ஒத்தை அடி பாதை மட்டும் வெள்ளை நிறத்தில் ஒரு கோடு போட்டது போல, நாங்கள் உட்காந்திருக்கும் மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது தெரிந்தது. நிச்சயமாய் அது நெற்றியில் இட்ட திருநீருதான். ஆனால் அது ஒரு எல்லைக் கோடு மாதிரியும் தோன்றிற்று. அதன் பின்னால் மலை உயர்ந்து கொண்டே போயிற்று.  அதுநாள் வரை காற்று அப்படி இனிக்கும்மென்று தெரியவில்லை. எத்தனை மலர்களை காற்று தழுவியிருக்கும், இலைகளில் இளைப்பாறியிருக்கும்?  சில சமயம் அவளது நான்

பீடம் - அழியாத உணர்ச்சிகள் (ஜெயமோகனின் சிறுகதை)

  எனக்கு நிறைய நாட்க்கள் இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு மனிதன் இந்த சமூகத்தால் வஞ்சிக்கப்பட்டோ அல்லது ஏமாற்றப்பட்டோ போனால், அதுவும் அவன் ஒடுக்கப்பட்டவனாக இருந்தால் (சாதியால் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும்),  நிச்சயம் அந்த ஒடுக்கப்பட்டவனால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. அதனால் அவனது மனதில் வரும் வடுக்களும், கோபமும், ஆங்காரமும் அப்படியே காற்றில் கறைந்துவிடுமா? அந்த மனிதனின் இறப்போடு முடிந்து போனால், அவனுக்கான நீதி என்ன? அந்த ஆங்காரம், கோபத்திற்க்கான பதிலென்ன? "அறத்தான் இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை" இந்த கதை ஒடுக்கப்பட்ட புலையர்  சாதியைச் சார்ந்த ஒருவனின் அறம் பற்றிப் பேசுகிறது. அவன் இறந்தபிறகும் வந்து நியாயம் கேட்க்கிறான். இல்லை என்றால் குருதி குடிக்காமல் விடமாண்டேன் என மிரட்டுகிறான். சிவனிடம் போய் வரம்வாங்கி வந்தவன். என்ன செய்ய முடியும்? நெய்விளக்கில் சத்தியம் செய்து இனிமேல் அடிமைவியாபாரம் பண்ணமாண்டேன் என சொன்னபிறகே, அவன் படையலுக்கு ஆறுதல் அடைவதாக ஒத்துக்கொள்கிறான்.  இப்பூவியில் இருக்கும் மனிதர்களின் ஆங்காரம், போபம், வடுக்கள் அவர்கள் மறைந்த பிறக

எரிமருள்

  இ ந்த பூத்தவேங்கையின் உள்ளிருந்து ஓசையற்ற காலடிகளுடன், கூர்ந்த மூக்குடன், விழித்த கண்களுடன், மெல்லமடிந்த சிறிய காதுகளுடன் உன்னை நோக்கி வருகிறேன். வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் எனச் சில ஒவ்வொருவருக்கும் இருக்கும். சாமனியனிம் அந்த தருணம் மறக்கப்பட்டுவிடுகிறது, ஆனால் கலைஞனுக்கு அது உச்ச தருணாமாகிறது. "முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்".  கவித்துவமான கதை. மெளனி அவர்களின் கதை போன்றது. இந்த கதையின் வாசல் எனக்கு இன்னும் திறக்கவில்லை. மறுவாசிப்புக்கு சில காலம் கழித்து உட்ப்படுத்தினால் திறக்கலாம். இதே போன்ற ஆசிரியரின் மற்ற கதைகள் படித்தால், நிச்சயம் விளங்கும்.  வருங்காலங்களில் மீண்டும் குறிப்பு எழுத வேண்டும்.